Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    






திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வருவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சி கடைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன. ஆடுவதைக்கூடம் மூலமாக, ஆடுகளை தோல் உரித்து, கறியாக மாற்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் ஆடுவதைக் கூடம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளது. தற்போது, ஆடுவதை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கோழி இறைச்சி கடைகளில் நிகழும் சுகாதார சீர்கேடுகளை யாரும் கவனிப்பதே இல்லை. ஆட்டு தோல் நீங்கலாக, அனைத்து பகுதிகளும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுதோலும் பதப்படுத்தப்பட்டு வேறு பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. கோழி இறைச்சி கடையில், குடல், இறகுடன் கூடிய தோல் ஆகியவை கழிக்கப்படுகின்றன. “டிரம்‘களில் சேகரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் சாக்கு மூட்டையாக கட்டி, நீர்நிலைகளிலும், ஓடைகளிலும், குப்பை மேட்டிலும் வீசப்படுகின்றன. இரு நாட்களில், அவை அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. நீர்நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டும்போது, மூன்று நாட்களில் புழுப்பிடித்து காணப்படுகின்றன. மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், ஆட்டு இறைச்சி கடைகளை கண்காணிப்பதுபோல், கோழி இறைச்சி கடைகளை கண்காணிப்பது இல்லை. 
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுகின்றனர். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த இறைச்சி கடைகளில் இருந்தும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, சுகாதார ஆய்வுக்குழு முடிவெடுக்க வேண்டும். கள ஆய்வு நடத்தி, சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: