Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    




உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என சைனிக் பள்ளி மாணவர்களுக்கும், அருகில் உள்ள கிராம மக்களுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி வன ச்சரகம். இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமராவதி நகர், சாயப்பட்டறை, பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் சிறுத்தை ஒன்று இரவு நேரங்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் அமராவதி நகர் சைனிக் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அந்த சிறுத்தை அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து சாப்பிட்டுள்ளது. மற்றொரு நாள் அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாயை அடித்து சாப்பிட்டுவிட்டது. குறிப்பாக அமராவதி நகர் அரசு மருத்துவமனை மற்றும் சைனிக் பள்ளி அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், அதன் கால் தடங்கள் ஆங்காங்கு பதிந்துள்ளதை பலர் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர் சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகின்றனர்.
மேலும் சைனிக் பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சத்திற்குள்ளாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கவும் தலா 5 பேர் கொண்ட 2 குழுக்கள் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து, அமராவதி வனச்சரக வனவர் செல்வராஜ் வெள்ளிக்கிழமை கூறியது:
இரவு நேரங்களில் 2 குழுக்களாகப் பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தையில் கால் தடங்கள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி வருகிறோம். ஓரிரு நாள்களில் கூண்டு வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சைனிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இரவு நேரங்களில் அறையை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், மேலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அந்தச் சிறுத்தையைப் பிடித்து விடுவோம் என்றார்.

0 comments: