Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    
மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் கைதுமதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2-ந் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து, மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், போலீசார் கொடைக்கானலுக்கு சென்று ஜமால்முகமது உடலை மீட்டனர். பின்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக பலரை தேடி வந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் முக்கிய குற்றவாளிகளான முகமது சித்திக் (35), மாரிமுத்து (27) ஆகியோர் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

“அலாவுதீன் டிரஸ்ட் என்ற அமைப்புக்குச் சொந்தமான 1 ஏக்கர் 64 சென்ட் நிலம் அரசரடி புதுஜெயில் ரோடு, முரட்டன்பத்திரி பகுதியில் உள்ளது. இந்த டிரஸ்டுக்கு தலைவராக ஜமால்முகமதுவும், 11 பேர் உறுப்பினராகவும் இருந்து வந்தனர். இந்த நிலத்தை விற்கும் உரிமைக்கான பவரை ஜமால்முகமதுவிற்கு டிரஸ்ட் உறுப்பினர்கள் வழங்கி இருந்தனர்.

அந்த நிலத்தில் கணேசன் என்பவரின் மாமனார் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து உழவடை செய்து வந்தார். அவரது இறப்பிற்கு பின்னர் கணேசன் நிலத்தை பராமரித்து வந்தார். எனவே அந்த நிலத்தில் தனக்கு பங்கு தருமாறு கணேசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கணேசனுக்கு ஆதரவாக வக்கீல் ஒருவர் இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் அரசரடி ஏ.ஏ.ரோட்டில் வசிக்கும் பழனிவேலுக்கு (முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமியின் சகலை) இந்த நிலம் தொடர்பாக தெரியவந்தது. எனவே அவர் நிலத்தை விற்கும் போது தங்களுக்கு தருமாறும், ஒரு சென்ட் ரூ.8 லட்சம் வரை தருவதாகவும் ஜமால்முகமதுவிடம் கூறினார். அதன்பின் முன் பணமாக ரூ.65 லட்சம் ஜமால்முகமதுவிற்கு வழங்கப்பட்டது. பணம் வழங்கி வெகு நாட்கள் ஆகியும், இடத்தை பத்திரம் போட்டுத் தராமல் ஜமால்முகமது தயங்கி வந்தார்.

இந்த நிலையில், உழவடை செய்து வரும் கணேசன், கூடல்புதூர் சித்திக் உள்ளிட்டோர் ஜமால்முகமதுவை கடத்தினார்கள்.

கடந்த 1-ந் தேதி அலாவுதீன் டிரஸ்டுக்கு சொந்தமான நிலத்தில், 5 சென்ட் நிலம் பழனிவேல் பெயருக்கும், 5 சென்ட் நிலம் பழனிவேல் மனைவி உமாராணி பெயருக்கும், 10 சென்ட் நிலம் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா பெயருக்கும் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலத்தில் மீதிப்பகுதி அனைத்துக்கும் கணேசன் பெயரில் பவர் வாங்கப்பட்டது.

இந்த பத்திரப் பதிவுக்காக சம்பவத்தன்று ஜமால்முகமதுவிற்கு ரூ.20 லட்சம் பணம் ரொக்கமாகவும், ரூ.10 லட்சம் காசோலையாகவும் கொடுக்கப்பட்டன. அதன்பிறகுதான் (செப். 2-ந் தேதி) ஜமால்முகமது கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் தெரியவந்த நிலையில், ஜக்கிய ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், “ஜமால்முகமது கொலை வழக்கை, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் அறக்கட்டளை சொத்துக்களை விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களையும், அந்த சொத்துக்களை வாங்கி லாபம் அடைந்தவர்களையும் இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உரிய நீதி கிடைக்கும்” என்று கூறியிருந்தனர்.

இதுபற்றி தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, ஜமால்முகமதுவிடம் சொத்துக்களை வாங்கிய இந்திரா (திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மகள்), பழனிவேல் (ஐ.பெரியசாமியின் சகலை), அவருடைய மனைவி உமாராணி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

கைதான 3 பேரும் மதுரை 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு திரிவேணி, அவர்கள் 3 பேரையும் வருகிற 7-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, இந்திரா, உமாராணி ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், பழனிவேல் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்

0 comments: