Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், வேளாண் இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:–
பாலசுப்பிரமணியம் (உழவர் உழைப்பாளர் கட்சி):– அருள்புரத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உறுப்பினர்களாக உள்ள சாயப்பட்டறையாளர்கள் சாயக்கழிவுநீரை முறைகேடாக நிலத்தில் பாய்ச்சுகிறார்கள். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வழியாக சாய நீரை பூமிக்குள் இறக்குவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
கரைப்புதூர், சுக்கம்பாளையம், நொச்சிப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டது. கால்நடைகளுக்கு கூட தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாய திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி):–
பாசன சபையின் பெயரில் வங்கியில் இருக்கும் பணத்துக்கான வட்டியை அமராவதி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
வாய்க்கால் பராமரிப்பு பணிகளை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. இந்த பணியை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கே வழங்க வேண்டும். தாராபுரம் பகுதியில் குறுகிய ரக விதை நெல் மானியத்துடன் வழங்க தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசின் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி விதை நெல் விலை அதிகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரக நெல் 115 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். தற்போது போதுமான தண்ணீர் இருப்பதால் குறுகிய கால நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் நெல்லுக் கான மானியத்தை விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவிந்தாபுரம், முத்தூர், சத்திரம் பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. அதனால் யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தனியார் உரக்கடை உரிமையாளர்கள், யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்:– கரைப்புதூர் பகுதியில் உள்ள சாயக்கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். நெல்லுக்கு மானிய விலை வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டு அறிவிக்கப்படும். யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது ஆர்.டி.ஓ. மூலம் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

0 comments: