Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
சோழவந்தான் நூலகத்திற்கு விரைவில் புதிய கட்டிடம்: கருப்பையா எம்எல்ஏ உறுதி
சோழவந்தானில் நூலகம் கடந்த 1958–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் போட்டித் தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், கலை, இலக்கியம், கவிதை, கட்டுரை, வரலாறு, புவியியல், மற்றும் குடும்ப பெண்கள், மாணவிகள் படிக்கும் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர்களுக்கு தேவையான நீதிக்கதைகள், என்சைக்ளோபீடியா, கம்யூட்டர் சம்பந்தமான ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இந்த நூலகத்திற்கு தினசரி இதழ்கள்–6, வார இதழ்கள்–8, மாத இதழ்கள்–69, காலாண்டு இதழ்–2 மற்றும் தபால் மூலம் 14 இதழ்களும் வருகின்றன. நூலக உறுப்பினர்களாக சுமார் 3700 பேர் உள்ளனர். முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவம், பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்பட 38 பேர் புரவலராக உள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 140 வாசகர்கள் வந்து செல்கின்றனர்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த நூலகம் 1985–ம் ஆண்டு இரண்டாம் நிலை நூலகமாக மாறியது. கடந்த 2006 முதல் வாடிப்பட்டி தாலுகா நூலகங்களுக்கு “ஊதியம் வழங்கும் மையமாக” செயல் பட்டு வருகிறது. நிரந்தரம் மற்றும் தினக்கூலி பணியாளர்களாக 4 பேர் உள்ளனர்.
கடந்த சில ஆண்டிற்கு முன் இங்கு வந்த கம்யூட்டர் இணைய வசதி போதிய இடவசதி இல்லாமல் மற்றொரு நூலகத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழைய கட்டிடமாக உள்ளதால் மழை காலங்களில் ஒழுகி புத்தகங்கள் நனையும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து சட்ட மன்ற உறுப்பினர் கருப்பையாவிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு புதிய கட்டி டம் கட்டி தர, நூலகர் ஆறுமுகம் மூலம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கருப்பையா எம்.எல்.ஏ., “நான் சட்டமன்ற நூலக குழு உறுப்பினராகவும் உள்ளதால் தமிழக முதல்வரிடமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடமும் எடுத்துக்கூறி விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, யூனியன் சேர்மன் அன்னக் களஞ்சியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: