Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், மும்முனை போட்டி நிலவுவதால், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தலை தி.மு.க., புறக்கணித்துள்ள நிலையில், இரு கம்யூ., கட்சிகளும் கூட்டாக களமிறங்குகின்றன. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இரு வார்டுகளிலும், கம்யூ., கட்சிகள் போட்டியிடுகின்றன. தே.மு.தி.க.,வும், பா.ஜ.,வும் இணைந்து தேர்தலை சந்தித்தால், மும்முனை போட்டி உருவாகும்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை, கண்ணமநாயக்கனூர் ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஒன்றியக்குழு ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. உடுமலை நகராட்சி எல்லையில் அமைந்துள்ள இவ்விரண்டு ஊராட்சிகளிலும், போட்டி எப்போதும் கடுமையாக இருக்கும். தற்போதைய இடைத்தேர்தலிலும், இரண்டு ஊராட்சி தலைவர் பதவிக்கும் போட்டி அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., சார்பில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மா.கம்யூ., - பா.ஜ., சார்பில் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். தி.மு.க., உட்பட தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன், சுயேச்சைகளும் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
பெரியகோட்டை ஊராட்சியில், சுயேச்சையாக வெற்றி பெற்று, ஊராட்சி தலைவராக பதவி வகித்து, இறந்த பிரகாஷ் சகோதரர் முத்துக்குமார் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களின் ஆதரவை தொடர்ந்து திரட்டி வருகிறார்.சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான அ.தி.மு.க., வினர், பெரியகோட்டை ஊராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலு தலைமையில் பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ., மற்றும் கம்யூ., சார்பில், வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும், பிரசாரம் மேலும் தீவிரமடையும்.
அவிநாசியில் "கப்-சிப்' : அவிநாசி பகுதியில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு, இதுவரை ஒரு வேட்பாளர் கூட, வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவிநாசி ஒன்றியத்தில், 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் (புதுப்பாளையம், கணியாம்பூண்டி ஊராட்சி), பழங்கரை ஊராட்சி, 12வது வார்டு (பெரியாயிபாளையம்), நம்பியாம்பாளையம் ஊராட்சி, 9வது வார்டு (எம்.நாதம்பாளையம்), வேட்டுவபாளையம் ஊராட்சி, 6வது வார்டு (வேட்டுவபாளையம்) ஆகிய வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலும், அதே தினம் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல் துவங்கி, 5 நாட்கள் ஆகியும், இதுவரை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. பூண்டியை பொறுத்தவரை அ.தி.மு.க., சார்பில் பழனிசாமி, ஒன்றிய வார்டு 16ல் நடராஜ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஏற்கனவே பிரசாரத்தை துவக்கி விட்டனர்.அ.தி.மு.க., வேட்பாளர்கள் இன்று, வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையிலும், மற்ற கட்சி நிர்வாகிகள் மத்தியில் எவ்வித பரபரப்பும் இல்லை. பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு மா.கம்யூ., - இ.கம்யூ., கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதேபோல், தே.மு.தி.க., - பா.ஜ., சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
கம்யூ., கட்சியில் சுமூக உடன்பாடு : திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் மா.கம்யூ.,வும், 45ல் இந்திய கம்யூ., கட்சியும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. திருமுருகன்பூண்டி பேரூராட்சி மற்றும் 11வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு இந்திய கம்யூ., போட்டியிடுகிறது. 45வது வார்டு இ.கம்யூ., வேட்பாளராக, கிளை செயலாளர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தருமன், பூண்டி பேரூராட்சிக்கு ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். உடுமலை ஒன்றியம் ஆறாவது வார்டு கவுன்சிலர் பதவி, கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர், தளி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர், பல்லடம் நகராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, மா.கம்யூ., போட்டியிடுகிறது. மீதியுள்ள பதவிகளுக்கும், சுமூக உடன்படிக்கை ஏற்படுத்தும் வகையில், அந்தந்த கிளை கமிட்டி கூடி முடிவெடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற கட்சிகள் மவுனம் காத்து வரும் நிலையில், ஆளும்கட்சிக்கு எதிராக உள்ள கட்சியினரின் ஆதரவை திரட்டி, தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகளை, கம்யூ., கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த தேர்தலின்போது, 22வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட முத்துசாமி 2,319 ஓட்டுகளும், 45வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் 1,966 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர். இந்திய கம்யூ., வேட்பாளர்கள், 45வது வார்டில் 276 ஓட்டுகளும், 22வது வார்டில் 119 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். மா.கம்யூ., வேட்பாளர் 22வது வார்டில் 896 ஓட்டுகளை பெற்றிருந்தார். இரு கம்யூ., கட்சிகளும் கூட்டாக இணைந்து தேர்தலை சந்திப்பதால், 22வது வார்டில் போட்டி பலமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: