Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    
பொள்ளாச்சி, :  பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நிரம்ப இன்னும் இரண்டு அடியே உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். 
 பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, சேத்துமடை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 120அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 115 அடியாக உயர்ந்திருந்தது. பின்னர் அந்நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததால், அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. இதனால், கடந்த ஒரு வாரமாக நீர்மட்டம் உயராமல், அணை நிரம்ப தாமதமானது. 
 இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் தொடர்ந்து மழைபொழிவு இருப்பதால், ஊட்டுக்கால்வாய் மற்றும் குரங்கு அருவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 118 அடியை எட்டியது. அணை நிரம்ப இன்னும் இரண்டு அடியே உள்ளது. தற்போது வினாடிக்கு 1300கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியாக உயர்ந்துள்ளது.
 அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில், அணையின் மொத்த அடியான 120 அடியை எட்டி விடும். அணை நிரம்பும் போது, அணையின் பாதுகாப்பு  கருதி, மெயின் மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். அணை நிரம்ப உள்ளதால், ஆற்றோரத்தையொட்டி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‘ என்றனர்.
 மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் நேற்று பெய்த மழையளவு வருமாறு: பரம்பிக்குளம் 48மிமீ(மில்லிமீட்டரில்), ஆழியார் 6மிமீ, மேல்நீரார் 94மிமீ, கீழ்நீரார் 62மிமீ, வேட்டைக்காரன்புதூர் 44மிமீ, மணக்கடவு 52மிமீ, நெகமம் 14மிமீ, நவமலை 7மிமீ, சர்க்கார்பதி 18மிமீ, தூணக்கடவு 25மிமீ, பெருவாரிபள்ளம் 28மிமீ, காடம்பாறை 24மிமீ என்ற அளவில மழை பதிவாகியுள்ளது.

0 comments: