Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சக்தி ஆட்டோ காம்போனன்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்க உடன்பாடு காணப்பட்டது.
சக்தி நிறுவனத் தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு போனஸ் வழங்குவது குறித்து நிர்வாகத்துக்கும் சிஐடியு நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே மூன்று கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற நான்காவது கட்டப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தரப்பில் முதுநிலைத் துணைத் தலைவர் (மனிதவளம்) முத்துவேலப்பன், துணைப் பொது மேலாளர் (தொழில் உறவு மற்றும் நலம்) கே.ஆர்.ராஜேந்திரன், துணை மேலாளர் எஸ்.சுரேஷ்குமார் (தொழிலாளர் நலப்பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர்.
சிஐடியு சார்பில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மகாலிங்கம், பொதுச் செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளாளர் வி.காமராஜ், துணைத் தலைவர் ஆர்.பழனிச்சாமி, துணைச் செயலாளர் கே.கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் நடப்பு ஆண்டு தொழிலாளர்களுக்கு 16.66 சதவிகிதம் போனஸ் வழங்குவதென்று முடிவு காணப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.66 சதவிகிதம் உயர்வு ஆகும். ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாகக் கிடைக்கும். நிரந்தரத் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இதில் பயனடைவார்கள். 
பயிற்சி பழகுநர் (அப்பரன்டிஸ்) மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கவும் இருதரப்பு உடன்பாடு காணப்பட்டது. இதன் மூலம் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் பயனடைவர் என்று சிஐடியு சங்கச் செயலாளர் ஜெ.கந்தசாமி தெரிவித்தார்.

0 comments: