Thursday, October 16, 2014

On Thursday, October 16, 2014 by farook press in ,    
திருப்பூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பூட்டுப் போட பெண்கள் கோபாவேச போராட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முடிவுப்படி திருப்பூரில் செவ்வாயன்று காலேஜ் ரோடு சந்திரகாவி மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு முன்பாக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் காலையிலேயே அணிதிரண்டனர். இந்த போராட்ட அறிவிப்பதைத் தொடர்ந்து காவல் துறையின் மாநகர துணை ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பெண்கள் மதுபான போதையால் ஏற்படும் பாதிப்புகளை கூறியபடி கடையை மூட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மைதிலி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் செல்வி, துணைச் செயலாளர்கள் தேவி, சுதா, பொருளாளர் நிர்மலா, மாநகரக்குழு உறுப்பினர்கள் சுனிதா, பிந்து, சுமதி, அம்சவள்ளி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 
மாதர் சங்கப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரச் செயலாளர் எம்.ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில் இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் தடுப்பு அரணைத் தாண்டி மதுபானக் கடைக்குப் பூட்டுப் போடுவதற்காக முழக்கமிட்டபடி மாதர் சங்க நிர்வாகிகள் கடை நுழைவாயில் பகுதியில் புகுந்தனர். உடனடியாக காவல் துறையினர் திரண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றி காவிரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.





0 comments: