Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by farook press in ,    
திருப்பூரிலிருந்து வீட்டுக்கு தெரியாமல் கோவாவுக்கு சுற்றுலா சென்ற 5 மாணவர்கள் மீட்பு போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
திருப்பூர் சாமுண்டிபுரம், வலையன்காடு, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ஆகாஷ், வாசிம் அகரம் உள்பட 5 மாணவர்கள் குமார்நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9–ம்வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 5 பேரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். இந்தநிலையில் இவர்கள் 5 பேருக்கும் கோவா சென்று சுற்றிப்பார்க்க ஆசை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 5 பேரும் அவரவர் வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் பணம் எடுத்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி விட்டதும் திருப்பூர் ரெயில்நிலையம் வந்தனர். அந்தநேரத்தில் வந்த ஒரு ரெயிலில் ஏறி கோவை சென்று அங்குள்ள ஒரு லாட்ஜில் இரவு தங்கினர்.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் மாணவர்களை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து திரிந்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். நேற்று காலை தூங்கி எழுந்த மாணவர்களுக்கு எங்கு செல்வது? எப்படிசெல்வது? என்று தெரியாமல் பின்னர் திருப்பூருக்கு வந்து நேராக பள்ளிக்கு சென்றனர். மாணவர்களின் உறவினர் காலையில் மீண்டும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது பள்ளியில் 5 பேரும் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் பள்ளிக்கு சென்று 5 மாணவர்களையும் மீட்டு விசாரித்தனர். பின்னர் 15 வேலம்பாளையம் போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அங்கு அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் (கவுன்சிலிங்)கூறி மாணவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

0 comments: