Monday, December 15, 2014

On Monday, December 15, 2014 by Unknown in ,    
விதிமீறலில் ஈடுபட்ட 70 கிரானைட் குவாரிகளுக்கு அபராதம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக, இரண்டாவது நோட்டீஸ் மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உரிமம் வழங்கப்பட்ட 195 குவாரிகளில், 83 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குவாரிகளால் ஏறத்தாழ ரூ.13 ஆயிரம் கோடிக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், ஒவ்வொரு குவாரிக்கும் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க குவாரி உரிமதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கடந்த ஆண்டில் விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக விசாரணை நிறுத்தப்பட்டது. தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, 70 குவாரிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் முன்பு, குவாரி உரிமதாரர்கள் சார்பில் அவர்களது வழக்குரைஞர்கள் ஆஜராயினர். சனிக்கிழமை வரை, 70 குவாரிகளின் தரப்பிலும் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, அபராதம் விதிப்பு முறைப்படி கணக்கிடப்படவில்லை.
விற்பனைக்குரிய கற்களைக் கணக்கிட்டால், அனுமதிக்கப்பட்ட அளவுக்குத்தான் குவாரிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என, குவாரி உரிமதாரர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான விளக்கம் அளிக்க காலஅவகாசம் கோரியுள்ளனர்.
முதல்கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த விசாரணை டிசம்பர் 18, 19ஆம் தேதிகளில் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான இரண்டாவது நோட்டீஸ், 70 உரிமதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உரிமதாரர்கள் நேரடியாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு, அபராதம் இறுதி செய்யப்பட்டு, அத்தொகையை வசூலிப்பதற்கு மூன்றாவது நோட்டீஸ் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

0 comments: