Wednesday, December 10, 2014

On Wednesday, December 10, 2014 by farook press in ,    
ஆந்திர போலீசாரால் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 
இத்தாக்குதலுக்கு ஆந்திர முதல்வரும், மத்திய அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. 
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று வந்துள்ளார். இலங்கையில் நடந்த இன அழிப்பு போரில் லட்சக்கணக்காண அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையிலும் எதையும் பொருட்படுத்தாமல் ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது.
இந்த இரு நிகழ்வுகளையும் விருப்பு, வெறுப்பின்றி பதிவு செய்வது பத்திரிகையாளர்களின் கடமையாகும். அந்த வகையில் திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்கள் மீது ஆந்திரா போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட தமிழக செய்தியாளர்களை சட்டவிரோதமாக கைது செய்து, அவர்களை ஆந்திர போலீசார் வனப்பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். மேலும் அவர்கள். தமிழக செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட பொருட்களையும் திருமலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய ம.தி.மு.க.வினர் மீதும் ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது ஆந்திர போலீசார் மீண்டும் தாக்குதல் நடத்தி, அவர்கள் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களையும் உடைத்துள்ளனர்.
இப்படியான அராஜக போக்கை கடைபிடித்த ஆந்திர காவல்துறையின் செயல் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் இந்த ஜனநாயக விரோத செயல். இவர்களின் அராஜக நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆந்திர போலீசாரின் இந்த சட்டவிரோதமான, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயலை திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவர் மீதும் ஆந்திர முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தமிழக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கோர வேண்டும்.
இந்த விசயத்தில் மத்திய அரசு தலையிட்டு பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசு தனது அரசு ரீதியான கண்டனத்தை ஆந்திர அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 
மேலும் உலக மனித உரிமை தினமான இன்று திருப்பதியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆந்திரா போலிஸ்சாரை கண்டித்து இன்று மாலை 4மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாவட்டத்திலுள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 
உரிமைகளை நிலைநாட்ட உறவுகளே வாரீர்…ஊடக சுதந்திரம் இந்த தேசத்தின் உயிர் நாடி… அதை காத்திட கரம் கோர்ப்போம் வாரீர்…
செயலாளர் 
( திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்)

0 comments: