Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்துக்கு என்று புதிதாக சுற்றுலாத்துறை அலுவலகம் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட திட்டக்குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் (பொறுப்பு) ரூபன் சங்கர்ராஜ், திட்டமிடும் அதிகாரி வீரமலை ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், பிற துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் கோவிந்தராஜ் பேசியதாவது:–
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 6 நடை மேம்பாலங்கள் அமைக்க ரூ.4 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் எந்திரங்கள் வாடகைக்கு விடுவதில் இலக்கை அடையவில்லை. எனவே இதுபற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்திரங்களை முழுமையாக வாடகைக்கு விட வேண்டும்.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளன. இவற்றில் மீன் வளத்துறையினர் போதுமான மீன் குஞ்சுகளை விட வேண்டும். மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை போன்றவற்றில் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பில்லூர் 2–வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு என்று இதுவரை தனியாக சுற்றுலா அலுவலகம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிதாக சுற்றுலாத்துறை அலுவலகம் தோற்றுவித்து, புதிதாக ஒரு அலுவலரை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினர்கள், பழனிசாமி, நடராஜன், கோவிந்தசாமி, சண்முக சுந்தரம், வாசுதேவன், ஜெயலட்சுமி, விஜயகுமார், கிருஷ்ணகுமார், பசுபதி மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments: