Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரிய வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வர்த்தகத்தில் ஈடுபடும் நைஜீரியர்கள் திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது வழக்கம். பெரும்பாலான நைஜீரியர்களுக்கு விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதில்லை. விசா காலம் முடிந்த பின்னரும் அவர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்து வருகிறார்கள். இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் நைஜீரியர்களை போலீசார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தாலும் கூட ஆவணங்கள் இல்லாமல் நைஜீரியர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள கியாஸ் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட தகராறில் நைஜீரிய வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த நைஜீரிய வாலிபர் பெயர் இசனேக் வி ஜிசிக்கோ(வயது 31) என்பதும், நைஜீரிய நாடு இமாகு ஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் தங்கியிருந்து பனியன் வர்த்தகம் செய்து வந்ததும், ஆனால் அவரிடம் பாஸ்போர்ட், விசா, மஞ்சள் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்ததாக இசனேக் வி ஜிசிக்கோவை திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் கைது செய்து திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2–ல் ஆஜர்படுத்தினார்கள். இசனேக் வி ஜிசிக்கோவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் கோர்ட்டு முன் போலீஸ் ஜீப்புக்குள் அவர் அமர்ந்து இருந்தார். மாஜிஸ்திரேட்டு வேலுச்சாமி கோர்ட்டில் இருந்து வெளியே நின்ற ஜீப்புக்கு அருகே வந்து இசனேக் வி ஜிசிக்கோவிடம் விசாரணை நடத்தி விட்டு, பின்னர் அவரை வருகிற 31–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

0 comments: