Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
உடுமலை அருகே பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்கள் நன்றாக விளைந்த நிலையில் மணிகள் இல்லாமல் கதிர்கள் மட்டும் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் விதை பயிரிடப்பட்டு 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். 80 நாட்களை கடந்ததும் கதிர்களில் உள்ள மணிகள் முதிர்ச்சி பெறும். உடுமலையை அடுத்துள்ள மருள்பட்டியில் விவசாயி ஏ.சுப்பிரமணியத்தின் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 1 ஏக்கர் 60 சென்ட் இடத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் 90 நாட்களாகிறது. அந்த பயிர் நன்றாக வளர்ந்து நிற்கிறது. ஆனால் கதிர்களில் மணிகள் இல்லாமல் வெறும் சக்கையாக உள்ளது. சில பயிர்களில் 3 கதிர்களும் உள்ளன. ஆனால் மணிகள் இல்லை.
இது குறித்து விவசாயி ஏ.சுப்பிரமணியம் கூறியதாவது:–
இங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் நடவு செய்து 3 மாதம் ஆகிறது. இது வரை ரூ.40 ஆயிரம் செலவு செய்துள்ளேன். இதன் மூலம் குறைந்த பட்சம் 60 மூட்டை மக்காச்சோளம் மகசூல் இருக்க வேண்டும். இப்போது ஒரு மூட்டை மக்காச்சோளத்திற்கு ரூ.1200–க்கு மேல் விலை உள்ளது.
60 மூட்டை மக்காச்சோளம் மகசூல் கிடைத்திருந்தால் ரூ.72 ஆயிரத்திற்கு விற்பனையாகிருக்கும். இதன் மூலம் செலவு போக ரூ.25 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த 1 ஏக்கர் 60 சென்ட் இடத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் கதிர்களில் மணிகளே இல்லை. வெறும் சக்கையாக உள்ளது.
இது குறித்த அந்த விதை வாங்கிய கடையில் தெரிவித்தேன். இதைத் தொடர்ந்து அந்த தனியார் கம்பெனியில் இருந்து மேலாளர் வந்து பயிர்களை பார்வையிட்டு சென்றார். தரமற்ற விதையினால் தான் கதிர்களில் மணிகள் இல்லாமல் வெறும் சக்கையாக உள்ளது என்று கூறியுள்ளோம். அதை அந்த கம்பெனியினர் ஏற்றுக் கொள்ள மறுத்து கூறுகின்றனர
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் பி.ஏ.பி.பாசனம் மட்டுமே எங்களுக்கு விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது. அதிலும் மகசூல் இல்லாமல் போனதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை துறையினர், விதை ஆய்வு துறையினர் ஆய்வு நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கே.பாலதொண்டபாணி கூறும் போது, ‘தரமற்ற விதைகளால் உடுமலை பகுதியில் பயிரிடப்படும் பயிர்களில் மகசூல் பாதிக்கப்பட்டு வருவதாக பல முறை விவசாய குறை தீர்ப்பு கூட்டங்களில் பேசி வருகிறோம். விதைகள் அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் பின்னரே விற்பனைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் அந்த தோட்டத்திற்கு விதைச்சான்று துறை அதிகாரிகள் நேற்று மதியம் சென்று மக்காச்சோள பயிர்களையும், அதில் மணிகள் இல்லாமல் கதிர்கள் மட்டும் வெறும் சக்கையாக இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

0 comments: