Sunday, December 21, 2014

On Sunday, December 21, 2014 by farook press in ,    
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார்.
தாராபுரம் அருகே உள்ள சீராம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32). நிதி நிறுவன அதிபர். இவருடைய மனைவி ராதா (25). இவர் தாராபுரம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் செல்வமித்ரா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்ற கனகராஜ் தனது மனைவி ராதா மற்றும் நண்பர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு “நான் விஷம் குடித்து விட்டேன், ஒரு மணி நேரத்தில் இறந்து விடுவேன்“ என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்ததோடு மட்டுமின்றி செல்போனையும் அணைத்து வைத்துவிட்டார்.
இதனால் பதறிப்போன அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் ஒரு காரில் கனகராஜை தேடி அலைந்தனர். அவரை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால் அவர்களால் கனகராஜை கண்டு பிடிக்க முடியாததால் நேராக தாராபுரம் போலீஸ் நிலையம் சென்று தகவல் கூறினார்கள். அப்போது தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வெளியில் இருந்து தகவல் கூறிய ஒருவர் “ தில்லாபுரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் வயல்வெளியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாகவும், அவருடைய வாயில் நுரைதள்ளி இருப்பதாகவும், அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் சற்று தொலைவில் நிற்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கனகராஜ் உறவினர்கள் நேராக அங்கு சென்று பார்த்த போது, அது கனகராஜ் என தெரியவந்தது. உடனடியாக அவரை காரில் ஏற்றிக்கொண்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து தாராபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்து, ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

0 comments: