Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை:

’’பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மைய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தொடர்ந்து சரிந்துவரும் பொருளாதார நிலையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நூறுநாள் வேலைத் திட்டத்தையும் பலவீனப்படுத்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ள பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என ஒவ்வொருநாளும் ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.

பாபர் மசூதியை இடித்து நாடெங்கும் கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் இப்போது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் குறித்தும் பிரச்சனை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். பழங்காலக் கோயில் ஒன்றின் மீது தாஜ்மகால் கட்டப்பட்டிருப்பதாக இப்போது உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் பேசியிருக்கிறார். 

வகுப்புவாத வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு அந்தச் சந்தடியில் தனியாருக்கு எல்லாவற்றையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு உலை வைப்பதுதான் பாஜக அரசின் திட்டமோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

”பகவத் கீதை என்பது ஒரு நற்செய்தி நூலல்ல. அதுவொரு சமய நூலோ அல்லது தத்துவ நூலோ அல்ல.  தத்துவ அடிப்படைகளை முன்வைத்து மதத்தைத் தாங்கிப்பிடிக்கும் நூல்தான் அது.” என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். 

 இந்திய சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் எதிர்ப் புரட்சியை ஆதரிக்கும் நூலாகவே அதை அவர் பார்த்தார். அதைத் தேசியப் புனித நூலாக அறிவிப்போம் என்பதை சனநாயக சக்திகள் ஒருபோதும் ஏற்க முடியாது.  மக்களைப் பிளவுபடுத்தும் அந்த முயற்சியை பாஜக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன். 

எந்த மதத்துக்கும் சார்பில்லாததும், அறநெறிகளைப் பரப்புவதும், உலகப் பொதுமறை என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான திருக்குறளை தேசியப் பொதுமறையாக அறிவிக்கவேண்டும்.  இந்தக் கோரிக்கையை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments: