Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
திருப்பூர், : 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான தொண்டு நிறுவனம் சக்ஷம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் திருப்பூர் மத்திய அரிமா சங்கத் தலைவர் ராஜ்குமார், ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், சக்ஷம் அமைப்பின் தேசிய செயலாளர் கமேஷ்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கங்காதரன், தமிழ்நாடு பிரசாரக்குழு தலைவர் கேசவவிநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, குற்றங்கள், இழிவுத்தன்மை தொடர்பாக அந்தந்த தாசில்தாரிடம் முறையீடு செய்ய வேண்டும் என்றிருப்பதை, போலீஸ் ஸ்டேஷனிலும் முறையீடு செய்யலாம் என்று மசோதாவில் திருத்த செய்யப்பட வேண்டும். 6  வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்றிருப்பதற்கு பதில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 18 வயது மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்க வேண்டும் என்று மசோதா திருத்தம் செய்யப்பட வேண்டும். 
அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யும்விதமாக திருத்தம் செய்ய வேண்டும். அரசின் சி மற்றும் டி பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயதுவரம்பு முழுமையாக அகற்றும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும். 100 சதவீத உடல்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளில் மனைவி அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 comments: