Sunday, December 28, 2014

On Sunday, December 28, 2014 by farook press in ,    
தமிழகத்தின் முன்னணி படைப்பாளிகள் மீது வன்மத்தோடு தாக்குதல் தொடுக்கும் மதவெறி பிற்போக்கு சக்திகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ் மரபை சீர்குலைக்க முனையும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு கூறியுள்ளது.
பொங்கலூர் தி.மு.ராசாமணி நினைவரங்கில் ஞாயிறன்று தமுஎகச 12வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், துணைத் தலைவர் செ.நடேசன், ஈ.அங்குலட்சுமி ஆகியோர் தலைமைக்குழுவாகச் செயல்பட்டனர். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் மா.நாட்ராயன் தமுஎகச கொடியை ஏற்றி வைத்தார். 
மாநாட்டை ஒட்டி புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை ஊராட்சிமன்றத் தலைவர் பி.வி.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். முதல் நூலை டாக்டர் நரேன் பெற்றுக் கொண்டார். மாவட்டக்குழு சார்பில் செங்கம் இளங்கோ அஞ்சலித் தீர்மானத்தை முன்வைத்தார். துணைத் தலைவர் மா.நாட்ராயன் வரவேற்றார். 
மாநாட்டைத் தொடக்கி வைத்து மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள் உரையாற்றினார். "இன்னும் எவ்வளவு நாட்களுக்கு எழுத்தாளர், படைப்பாளிகள், கருத்துச் சொல்வோரின் சுதந்திரம் இருக்கும் என்று சொல்ல முடியாதபடி காலம் மாறியிருக்கிறது. பாசிச சக்திகள் தங்கள் கோர முகத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. எது தர்மம், எது அதர்மம் என்று மக்கள் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பண்பாட்டுச் சூழலில் சிதைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் விஞ்ஞானத்தை பயன்படுத்தி, அஞ்ஞானத்தை வளர்க்க முனைகின்றனர். நான்காண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட படைப்பைக் கூட இப்போது எதிர்க்கவும், படைப்பாளியை இழிவுபடுத்தி அச்சுறுத்தவும் துணிகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருப்பதே இதற்குக் காரணம். எனவே இத்தகைய சூழலில் முற்போக்கு சக்திகள் மௌனம் காக்க முடியாது, மௌனம் காக்கக் கூடாது. எனவே நாம் பேச வேண்டும், செயல்பட வேண்டும். நம் முன்னோர்களின் வாள்கள் நமக்கு பேனாவாக, நாக்காக செயல்பட வேண்டும் என்று எஸ்.ஏ.பெருமாள் கூறினார்.
இதைத் தொடர்ந்து மாவட்டத் துணைச் செயலாளர் பி.ஆர்.கணேசன் கலை இலக்கிய அறிக்கையையும், மாவட்டத் துணைச் செயலாளர் கோவை சதாசிவம் பண்பாட்டு அறிக்கையையும், மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் அமைப்பு நிலை அறிக்கையையும் முன்வைத்தனர். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் என்.ராமசாமி வரவு செலவு அறிக்கையை முன்வைத்தார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில், எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், சன் டிவி வீரபாண்டியன், சுப வீரபாண்டியன் உள்ளிட்ட படைப்பாளிகள், எழுத்தாளர்கள், விமர்சகர்களை மிரட்டும் மதவெறி சக்திகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தேசத்தின் மதிப்பு மிக்கத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கார், பெரியார் போன்றவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் கேவலப்படுத்தி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆத்திரமூட்டும் வகையில் பேசுவோரை கண்டிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருப்பூரில் தற்கொலைகளைத் தடுக்கவும், நவீன கலை அரங்கம் அமைக்கவும், மாவட்ட நூலகத்தில் அதிகமானோர் அமர்ந்து படிக்க வசதியாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும், உடுமலை திருமூர்த்திமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும், நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும், உடுமலை நாராயணகவி மணி மண்டப ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு இலக்கியச் சந்திப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரியம் மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்க வேண்டும், பொங்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் விபத்துக்களை தடுக்கவும், கழிவுகளை பொது இடங்களில் கொட்டி அசுத்தம் செய்வதையும், நீர்நிலைகளை கழிவு தொட்டியாக மாற்றி மாசுபடுத்துவதையும் தடை செய்ய வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
புதிய நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆர்.குமார், துணைத் தலைவர்கள் செ.நடேசன், மா.நாட்ராயன், செங்கம் இளங்கோ, மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவை சதாசிவம், பி.ஆர்.கணேசன், தோழன் ராஜா, பொருளாளர் என்.ராமசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள் நிறைவுரை ஆற்றினார். நிறைவாக தமுஎகச பொங்கலூர் கிளை சார்பில் பி.நாகராஜ் நன்றி கூறினார். 
மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியில் ஒரே நாளில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை ஆனது.
மாலையில் கே.பொன்னுசாமி நினைவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் கலைக்குழு சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், செங்கம் இளங்கோ, உடுமலை துரையரசன் பாடல்கள் இசைக்கப்பட்டன. தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பொங்கலூர் தி.மு.ராசாமணி நினைவரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 12வது மாநாட்டை தொடக்கி வைத்து மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள் பேசுகிறார்.
மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர்.


0 comments: