Monday, December 15, 2014

On Monday, December 15, 2014 by Unknown in ,    
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
தமாகா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரி செல்ல விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த ஜி.கே.வாசன் இங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் த.மா.காவினர் செயல்படுவர். தென்மாவட்டங்களில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர்அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகர் வந்த வாசனை, ஐ.என்.டி.யு.சி. பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காமராஜரின் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வாசன் மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காமராஜரின் வழியில் த.மா.கா.வை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார். முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் விஸ்வநாதன், சித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகோபால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

0 comments: