Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
 
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தத் தொழிலாளர்கள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 11 தொழிற்சங்கங்களின் பேரவை கூட்டம் கடந்த 22ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் கடந்த 26ஆம் தேதி அரசு அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
 
இதைத் தொடர்ந்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27ஆம் தேதி தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடந்தது.
 
இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி 29ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன..
 
ஆனால், திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு போக்குவரத்து பணிமனைகளின் முன்பும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்கம் இந்த போராட்டத்தில் ஈடுபடாததால், அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களை கொண்டு பேருந்துகளை இயக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
 
இந்நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரபாகர்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், தமிழகத்தில் இன்று வழக்கம் போல பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
 
சென்னையைப் பொறுத்தவரை “போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினாலும், இன்று வழக்கம் போலவே மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.
 
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படும்” என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் தெரிவித்தார்.
 
எனினும் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் நீங்கலாக 11 தொழிற்சங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 இந்தப் போராட்டம்  தீவிமடையும் என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்வரை தொடரும் என்றும் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: