Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி வசூல் இயக்கத்திற்காக பிப்ரவரி 1 முதல் 15ம் தேதி முடிய வீடு, வீடாக மக்களைச் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து சிறப்புப் பேரவைக் கூட்டம் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி பங்கேற்று இன்றைய அரசியல் சூழ்நிலையையும், மார்க்சிஸ்ட் கட்சியின் பணிகளையும் விளக்கிக் கூறினார். அத்துடன் மக்களைச் சந்தித்து நிதி வசூல் செய்வதன் முக்கியத்துவத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தில் வசூல் இயக்க அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கிளைகளும் நேரடியாக வசூல் இயக்கத்தில் பங்கேற்கவும், அனைத்து ஊழியர்களைக் கொண்டு பகுதி வாரியாக வசூல் குழுக்கள் அமைக்கவும் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி முடிய நிதி வசூல் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. 
ஜனவரி 7 இயக்கம்
இக்கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் பேசினார். அரசு நிர்வாகம் ஆதரவற்ற முதியோர், விதவைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டித்தும், இம்மக்களுக்கு உடனடியாக நிலுவைத் தொகையுடன் மாதாந்திர உதவித் தொகையை வழங்கவும் வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஜனவரி 7ம் தேதி மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்துவதென்று அண்மையில் ஊத்துக்குளியில் நடைபெற்று முடிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் நகரம், கிராமம் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் உள்ளிட்ட நலத்திட்ட பயனாளிகளைச் சந்தித்து விண்ணப்ப மனுக்கள் பூர்த்தி செய்து ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி ஜனவரி 7ம் தேதி மனுக் கொடுக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரம் கருமாரம்பாளையம் கட்சிக் கிளை சார்பில் அப்பகுதியில் 167 வீடுகளில் மக்களைச் சந்தித்து வசூலிக்கப்பட்ட ரூ.2580-ஐ அக்கிளை உறுப்பினர் மாணிக்கசுந்தரம் என்.பாண்டியிடம் வழங்கினார்.
இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ உள்பட இடைக்குழு உறுப்பினர்கள், கட்சி கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: