Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by farook press in ,    
பொள்ளாச்சி–பழனி இடையேயான ரெயில் சோதனை ஓட்டம் உடுமலை வழியாக நேற்று நடைபெற்றது. இதனால் உடுமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகள் கடந்த 2009–ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இதில் முதல் கட்டமாக திண்டுக்கல்–பழனி இடையேயான பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி–பழனி இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளுடன் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரெயில் 15–க்கும் மேற்பட்ட பயணிகள் பெட்டியுடன் பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி பழனிக்கு சென்றடைந்தது.
ரெயில் சோதனை ஓட்டத்தையொட்டி ரெயில் வரும் நேரத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ரெயில்வே கேட் கொழுமம் ரோடு ரெயில்வே கேட் உள்ளிட்ட ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருந்தன. அப்போது ரெயில்வே கேட்டின் இரண்டு புறங்களிலும் பல வாகனங்கள் நின்றன. ரெயிலை காண பொதுமக்களும் வந்திருந்தனர்.
5 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த மாதம் ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில் சோதனை ஓட்டத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் ரெயில் தொடர் இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

0 comments: