Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
கிரானைட் முறைகேடு நடந்த பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் பட்டியலை தாக்கல் செய்ய சகாயம் உத்தரவு
மதுரை அருகே மேலூர், கீழவளவு, புது தாமரைப்பட்டி உள்பட பல இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சகாயம் நியமிக்கப்பட்டார்.
இவர் தனது குழுவுடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 3 கட்ட விசாரணையின் போது பி.ஆர்.பி. உள்பட பல கிரானைட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் புகார் மனு கொடுத்தனர். மேலும் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சகாயம் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
விதிமீறி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் விவசாயம், நீர்நிலைகள் அடைந்துள்ள பாதிப்பு விபரங்களை ஆதாரங்களுடன் சேகரித்து வருகிறார்.
முன்பு கண்மாய், ஓடை உள்பட நீர் நிலைகளில் செயல்பட்ட குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. விவசாய நிலங்களில் குவாரி நடத்த கலெக்டரின் அனுமதி அவசியம். ஆனால் கலெக்டரின் அனுமதி இல்லாமல் பல கண்மாய்களில் கற்களை கொட்டி தண்ணீரின் போக்கையே அடைத்துள்ளது ஆய்வில் தெரியவந்தது.
மேலும் இதை மீட்கவோ, கற்களை கொட்டியவர்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் இருந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது.
எனவே இதுபோல பல மோசடிகள் செய்து இருப்பதும் தெரியவந்ததை தொடர்ந்து நில பதிவுகள் குறித்த கிராம கணக்குகள், 1986–க்கு முந்தைய மற்றும் தற்போது உள்ள ‘அ’ பதிவேடு, சிட்டா, அடங்கல், குவாரி அனுமதி வழங்கப்பட்ட கோப்புகளை முழு விவரங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என கோட்டாட்சியர் செந்தில்குமாரிக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் 1993–ல் குவாரி செயல்பட்ட காலம் முதல் 2012–ம் ஆண்டு வரை பணியாற்றிய வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட அதிகாரிகளின் பட்டியலையும் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளதால் கடந்த 20 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குவாரிகள் அனுமதித்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் பல விதிமீறல்கள் நடந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததால், உத்தரவிட்டு இருப்பதாக தெரிகிறது.

0 comments: