Friday, January 02, 2015

On Friday, January 02, 2015 by farook press in ,    
சொத்து தகராறு
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்கிற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வஞ்சிப்பாளையத்தில் உள்ள தனது தங்கை கார்த்திகா வீட்டிற்கு குடிபோதையில் சென்றார். அங்கு கார்த்திகாவின் கணவர் சசிகுமாரிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கார்த்திகா தனது மற்றொரு அண்ணன் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து சாலையில் உள்ள கட்டிலில் கிருஷ்ணமூர்த்தி படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும், கிருஷ்ணமூர்த்தியை காணாததால் அவரது தந்தை தோட்டத்து சாலைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டையால் தாக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக சேவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை நடைபெற்றது. மோப்பநாய் யாரையும் பிடிக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காரணம் என்ன?
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரை அவரது சகோதரர் மற்றும் தங்கையின் கணவர் அடித்து கொலை செய்தார்களா? அல்லது மர்ம மனிதர்கள் யாராவது அடித்துக்கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: