Monday, March 30, 2015

On Monday, March 30, 2015 by farook press in ,    


உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டை பகுதியில் பள்ளி ஒன்றில்மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் அதே பள்ளியில் வேலை செய்துவந்த ஆசிரியர் ராம்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மீது மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். இந்த தகவல் அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் உடனடியாக காவல் துறைக்குத் தெரிவித்து குற்றம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு. மேலும்,கல்வித்துறை, காவல் துறைக்குத்தெரிவிக்காமல்நிர்வாகரீதியாக விசாரணை நடத்தி அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததும்குற்றவாளியைத் தப்புவதற்குச் செய்யக்கூடிய தவறான நடவடிக்கையாகும்.
ஆகவே காவல் துறைக்குத் தெரிவிக்காமல் சட்டத்துக்குப் புறம்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும்  சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.​
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்,மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து காவல் துறையிடம் புகார் கொடுத்த பிறகே,சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (பாக்சோ) சட்டப்பிரிவு 9 (எம்)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மட்டும் போதுமானதல்ல. பள்ளியின் ஆசிரியரே சிறுமியிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தொடர்ந்து மோசமாக நடந்து கொண்டிருந்ததால் மேற்படி பாக்சோ சட்டப்பிரிவு 9 (எப்) மற்றும் (எல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் சட்ட நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்துக் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும்பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது பெற்றோருக்கும் உரிய கலந்தாலோசனை வழங்கி உளவியல் பாதிப்பைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
கே.காமராஜ்
மாவட்டச் செயலாளர்

0 comments: