Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    
திருப்பூர் மாநகராட்சி, 2015-16-ஆம் ஆண்டுக்கு ரூ.585.28 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில், மொத்த வரவினங்கள் ரூ.566.81 கோடி எனவும், பற்றாக்குறை ரூ.18.47 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் 2015-16-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பட்ஜெட்டை நிதிக் குழுத் தலைவர் கண்ணப்பன் தாக்கல் செய்தார்.
இந்த வரவு, செலவுத் திட்டத்தின்படி, 2015-16-ஆம் நிதியாண்டுக்கான மொத்த வருவாய், மூலதன வரவுகள் ரூ. 566.81 கோடி, வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் ரூ.585.28 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.18.47 கோடி பற்றாக்குறையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி: பட்ஜெட் குறித்து மேயர் ஏ.விசாலாட்சி பேசியது:
தமிழக அரசின் 2015-16-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் திருப்பூர் உள்பட 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் சேர்க்க மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் கட்டுவதற்கு ரூ. 82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி மனித கழிப்பிடப் பகுதிகளில் கழிப்பறைகள் கட்டவும், ஏற்கனவே உள்ள பொதுக்கழிப்பறைகளை மேம்படுத்தவும், ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுசேவைகளைத் துரிதப்படுத்த நடைமுறையில் உள்ள மின்ஆளுமைத் திட்டங்களை ரூ. 60 லட்சத்தில் மேம்படுத்தவும், சூரிய சக்தி மூலமாக மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மாநகராட்சியின் பிற அலுவலகங்களிலும் ரூ. ஒரு கோடி மதிப்பில் மின் உற்பத்தி மையம் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நவீன ஆடு வதைக் கூடம்: மத்திய, மாநில அரசுகளின் மானிய நிதியுதவி, மாநகராட்சி பங்களிப்புடன் வெங்கமேடு, மண்ணரைப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஆடு, கோழி வதைக் கூடம் அமைக்கப்படும். பல்லடம் சாலையில் ஏற்கெனவே உள்ள ஆடுவதைக் கூடம் நவீனப்படுத்தப்படும். இதற்காக ரூ.30.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோர நடைபாதைகள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுஇடங்களில் பூங்காக்கள் அமைக்கத் தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் பூங்காக்கள் அமைக்கப்படும். நிகழாண்டு 10 இடங்களில் பூங்காக்கள் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாத இடங்களில் புதிதாக எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கவும், விரிவாக்கப்பட்ட முக்கிய சாலைகளில், சாலையோர விளக்குகள், சாலை மைய விளக்குகள் அமைக்கவும் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு ரூ.1.50 கோடி: பள்ளி மாணவிகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்கவும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுகாதாரமான முறையில் எரியூட்டவும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கான கட்டடம் கட்டவும், அடிப்படை பராமரிப்பு வசதிகள் செய்யவும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழுதடைந்த தார் சாலைகளை செப்பனிடவும், புதிதாக சாலைகள் அமைக்கவும் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை: தினசரி அங்காடி, ஆடுவதைக் கூடம், மீன் அங்காடி, வாரச் சந்தை ஆகியவற்றில் சேகரமாகும், 27 டன் மக்கும் குப்பைக் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரித்து, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதற்காக, நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் நிகழாண்டில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும்.
அரசு, தனியார் பங்களிப்புடன் குப்பையை அழிக்கவும், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் ரூ.ஒரு கோடியே 94 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு: பாதாளச் சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளில் இருந்து கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் எடுத்துவரப்பட்டு, பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யும் திட்டம் நிகழாண்டு நடைமுறைப்படுத்தப்படும். கடந்தாண்டு தொடங்கப்பட்ட தூய்மைமிகு திருப்பூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
துப்புரவுப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொசுத் தொல்லைகளை கட்டுப்படுத்த கொசு மருந்து, கொசு வலைகள் வாங்குவதற்காக ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்நல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் வாங்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

0 comments: