Monday, April 20, 2015

On Monday, April 20, 2015 by Unknown in ,    
திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழக்குத் தொடர்ந்தார்.
 இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில், இருமுறை திரையரங்கு உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.  அக்கூட்டங்களில் வழங்கப்பட்ட அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  அதன் விவரம் வருமாறு:
அனைத்து திரையரங்குகளிலும், உரிமம் வழங்கும் அலுவலரால் அனுமதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.  விழாக் காலங்களில், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது. இணைய முன்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. மேலும், இணைய வழியில் பெறப்பட்ட நுழைவுச் சீட்டை மாற்றித் தரும்போது பார்வையாளர்களுக்கு வணிகவரி முத்திரையிடப்பட்ட நுழைவுச் சீட்டு தவறாமல் வழங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டில் காட்சி நேரம், வகுப்பு, நுழைவுச் சீட்டு எண் மற்றும் வணிகவரித் துறை முத்திரை ஆகியவை இருக்க வேண்டும்.
  அரசின் முன் அனுமதியின்றி திரையரங்கில் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக காட்சிகள் நடத்தக்கூடாது. குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் காட்சிகள் முடியும் வரை முழுமையாக அவை இயக்கப்பட வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமைதாரர்களும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். விதியை மீறும் திரையரங்குகள் மீது புகார் ஏதும் வரப்பெற்றால் தமிழ்நாடு திரையரங்கு (ஒழுங்குமுறை) சட்டம் 1955-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: