Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆக.1 முதல் ஆக.25 ஆம் தேதி வரை 35 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 அச்சிடப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் தட்டுப்பாடு காரணமாக, விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தாமதம் ஆகி வந்தது. இதனால் விண்ணப்பதாரர்கள் இரு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. அச்சிடப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் பற்றாக்குறை நாடு முழுவதும் இருந்ததால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் பாஸ்போர்ட்டுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களாக இப் பிரச்னை நீடித்த நிலையில், தற்போது காத்திருப்பில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்தி:
 இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும், தூதரகங்களுக்கும் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய செக்யூரிட்டி அச்சகத்தில் இருந்து அச்சடிக்கப்படாத பாஸ்போர்ட் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  கடந்த சில மாதங்களாக குறைந்த உற்பத்தி காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்பட்டது.
  மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் துரிதமாக பாஸ்போர்ட் புத்தகங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆக.1 ஆம் தேதி முதல் ஆக.25 ஆம் தேதி வரை 35 ஆயிரத்து 529 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள்களிலும் மூன்று சுழற்சி முறையில் இரவு-பகலாக பாஸ்போர்ட் அச்சிட்டு தேக்கநிலையில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 தற்போது போதிய அளவில் பாஸ்போர்ட் புத்தகங்கள் இருப்பில் உள்ளதால், இனி வரும் காலங்களில் தாமதமின்றி விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றார்.

0 comments: