Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    


பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தியில் உள்ள தங்களது பாரம்பரியமான மீன் பிடிக்கும் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்கி கடத்தி செல்லப்படுவது பற்றி நீங்கள் கடந்த மே மாதம் பதவி ஏற்றதிலிருந்து பல தடவை உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.
சிறிது இடைவெளிக்கு பிறகு இலங்கை மீண்டும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. கடைசியாக இது தொடர்பாக உங்களுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்படுவது 3 தடவை நடந்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து 6 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற 30 மீனவர்கள் கடத்தி தலைமன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட் டுள்ளனர்.
3–வது சம்பவமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றிருந்த 4 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
இந்த பிரச்சனையில் உங்களது அரசு மேற்கொள்ளும் சரியான அணுகுமுறைக்கு நான் ஏற்கனவே பாராட்டி உள்ளேன். உங்களது அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் சரியான முறையில் செயல்பட்டனர்.
என்றாலும் இலங்கையின் அணுகுமுறை மாறவில்லை. அவர்கள் தொடர்ந்து கடுமையான போக்கையே கடைபிடிக்கிறார்கள். அப்பாவி தமிழக ஏழை மீனவர்களுக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் தந்திரமாக செயல்படுகிறார்கள். இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அவர்கள் தமிழக மீனவர்களை விடுவித்து இருந்தாலும் 64 படகுகளை இன்னும் விடுவிக்கவில்லை. இந்தப் போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் தீர்வு காண முடியும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

0 comments: