Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by Unknown in ,    
 



உடுமலை அருகே அமராவதி நகரில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், புதன்கிழமை நள்ளிரவில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமராவதி நகர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமத்திற்குள் கடந்த சில நாள்களாக சிறுத்தை ஒன்று, இரவு நேரங்களில் நடமாடி வருவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
இந்த சிறுத்தை, இப்பகுதியிலுள்ள அமராவதி வனச்சரகர் மாரியப்பன் வீட்டில் இருந்த நாய், சைனிக் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டி ஆகியவற்றை கொன்று தின்றுள்ளது. இதனால் இப்பள்ளியில் தங்கி படித்துவரும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அமராவதி நகர் வனச்சரகத்திற்கு உள்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர், செல்வபுரம், பூச்சிமேடு, கரட்டுப்பதி, மீன் பண்ணை, பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட கிராம மக்களை உஷார் படுத்தும் நோக்கில் தண்டோரா போடப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், கடந்த 2 நாள்களாக அமராவதி நகரில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
புதன்கிழமை இரவு அனைத்துத்துறையினர் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள ஆய்வாளர் மாளிகையில் நடைபெற்றது. இதன் பிறகு, நள்ளிரவு 2 மணி வரை அமராவதி வனச்சரகப் பகுதிகளுக்குள் மாவட்ட ஆட்சியர் நடந்து சென்று ரோந்துப் பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது, எங்கெங்கு கூண்டு வைக்கலாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமரா பொருத்தவும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், உடுமலை கோட்டாட்சியர் நா.குணசேகரன், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் 50- க்கு மேற்பட்டோர் ஆட்சியருடன் சென்றனர். இது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதுமலை, சத்தியமங்கலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள 5 கூண்டுகள் கொண்டு வரப்பட்டு, அமராவதி நகர் பகுதியில் வைக்கப்படும். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தப்படும். ரோந்துப் பணிகளில் ஈடுபட மேலும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை ஓரிரு நாள்களில் பிடிபடும் என நம்புகிறோம் என்றார்.

0 comments: