Monday, September 01, 2014

On Monday, September 01, 2014 by Unknown in ,    

படிப்பு என்பது பிறப்பிலேயே நிச்சயிக்கப்படுவது என பேச்சாளர் நெல்லை கண்ணன் தெரிவித்தார்.
மதுரை புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது: அன்பாக இருங்கள். உண்மையை பேசுங்கள். குறிப்பாக, இல்லங்களில் அன்பு தவழ வேண்டும். அன்பின் வழியது உயிர்நிலை என வள்ளுவன் வலியுறுத்தியதை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தையை வளர்க்கும் போதும் பள்ளிக்கு அனுப்பும் போதும் அன்பு செலுத்த வேண்டும். அந்த குழந்தையை படி,படி என தொல்லை படுத்தாதீர்கள். இரவு 8 மணிக்கு தூங்க வையுங்கள். அதிகாலையில் குழந்தை எழுந்துவிடும். அதற்கு ருசியாக சமைத்து உணவு பரிமாறுங்கள். உணவை திணிக்க முற்படாதீர்கள்.
பெண்கள் தொலைக்காட்சிப்பெட்டியில் நாடகம் பார்த்துக் கொண்டே குழந்தைகள் படிக்க வற்புறுத்துகின்றனர். இது தவறான போக்கு. இதை முதலில் கைவிட வேண்டும்.
நாடகங்களில் வரும் கதைகள் அனைத்தும் உறவுகளில் மோதல்களை ஏற்படுத்தும் கதைகளாகவே இருக்கின்றன. மாநிலத்தில் முதலிடத்தில் வருவார் என கருதப்படும் மாணவர் தோல்வியடைவதும், தேர்ச்சி பெறமாட்டார் என கருதப்படும் மாணவர் நல்லமதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவதும் நடக்கிறது. எனவே, படிப்பு என்பது பிறப்பின் போதே நிச்சயிக்கப்படுகிறது. அதை நீங்கள் மாற்ற முடியாது. படிப்பை வலியுறுத்தாவிட்டால் கூட குழந்தை சிறப்பாக படிக்கும். காமராஜர் போன்ற தலைவர்கள் இன்றைக்கு இல்லை. ஏழைக் குழந்தைகள் சாப்பாடு இல்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதை அறிந்து பள்ளிகளில் மதியஉணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அவர். படிப்பறிவே இல்லாமல் வாழ்வில் உயர்ந்த தலைவர்களை ஆராய்ச்சி செய்து இன்றைய மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.
குழந்தைகளிடம் மட்டுமல்ல, கணவர் மனைவியிடமும் மனைவி கணவரிடமும் அன்பை பொழிய வேண்டும். இல்லற வாழ்வில் அன்பும் அறமும் இருக்க வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். அறம் என்பது நேர்மை. கணவர் நேர்மை தவறி சம்பாதிக்கிறார் என்றால் மனைவி அதை தட்டிக்கேட்க வேண்டும். இல்லையென்றால் ஒருவரிடம் பணம் பெற்று இதை செய்கிறேன் என கணவர் வாக்குறுதியளித்து அதை செய்யாமல் விடும் சூழல் ஏற்பட்டால் குடும்பமே வருந்தும் நிலை ஏற்படும். குறிப்பாக குழந்தைகளை பாதிக்கும். தனியார் பள்ளிகளில் 3 வயது குழந்தை படிக்க லட்சக்கணக்கில் பணம் கேட்கின்றனர். ஏதாவது தவறான தொழில் செய்பவர்கள் தான் அவ்வாறு பணம் செலுத்த முடியும். இது தேவையில்லாது.
அமெரிக்காவில் 5 வயது ஆனபிறகு தான் குழந்தை கல்விநிலையம் செல்ல வேண்டும் என்ற தகுதியை அரசு நிர்ணயித்துள்ளது. அதுவும் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் தான் சேர்க்க முடியும். இந்த விஷயத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. ரஷியாவிலும் இந்த நிலை தான்.
இதை இந்தியர்களாகிய நாமும் பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வையுங்கள். குறிப்பாக, தாய்மொழியில் படிக்க வையுங்கள். பசித்துப்புசி என்ற அவ்வைப்பாட்டியின் வாக்கை நாம் பின்பற்றினால் போதும். உடல் இன்னல்களில் இருந்து பாதுகாக்க முடியும். குடிப்பழக்கம் கொடுமையானது என வள்ளுவரும் நம் முன்னோர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மதுவுக்கு அடிமையாகாதீர்கள். உதவி தேவைப்படுவோருக்கு கை கொடுத்து உதவுங்கள். பணம் இருந்தால் இóல்லை என்று சொல்லாமல் கொடுங்கள். உங்களுக்கு இறைவன் மென்மேலும் கொடுப்பான் என்றார்.
நிகழ்ச்சியில், முனைவர் பா.ஆனந்தகுமார், நா.பாண்டுரங்கன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருவூல கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் கே.எஸ்.முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ந.ஆறுமுக நயினார் முன்னிலை வகித்தார். ஜெயம்புக்ஸ் நிர்வாகி ஆர்.ராஜ் ஆனந்த் வரவேற்றார். பபாசி செயற்குழு உறுப்பினர் மு.பழனி நன்றி கூறினார்.

0 comments: