Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள் நேற்று வழக்கம்போல இயங்கியது.
தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆங்காங்கே சாலை மறியல், கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தேறியது.
இதனையடுத்து வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ‘டாஸ்மாக்’ கடைகள் என எல்லா கடைகளும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், முக்கியமான பொது இடங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தலைநகர் சென்னையில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்பட்டன. ஓட்டல்கள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகளும் திறக்கப்பட்டிருந்தன. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்சர் பிளாஸா உள்ளிட்ட சில வணிக வளாகங்களில் சில கடைகள் மட்டுமே இயக்கப்பட்டன. பெரும்பாலான சினிமா அரங்குகளில் போலீசார் பாதுகாப்புடன் காட்சிகள் இயக்கப்பட்டன.
சென்னை தியாகராயநகர், அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. முக்கியமான பொழுதுபோக்கு பூங்காக்கள், கோவில் கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நேற்று அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.அம்மா உணவகத்தில் கூட்டம்
நகரின் பெரும்பாலான இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் நேற்று ‘அம்மா உணவகங்களில்’ மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கமான நேரத்தினை காட்டிலும் அம்மா உணவங்களில் வேகமாகவே உணவு வகைகள் விற்றுத்தீர்ந்தன.
மேலும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லம், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் உள்பட பல இடங்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலுக்கு பிறகு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. காலை முதல் காத்துக்கிடந்த பயணிகள், பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியுடன் தங்கள் ஊர்களுக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

இதேபோல், சென்னை- பெங்களூருக்கு செல்லக்கூடிய தமிழக அரசு பஸ்கள் எந்த வித தடையும் இன்றி செல்ல தொடங்கின. அதே போல், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் இயங்கத்தொடங்கின. தனியார் ஆம்னி பஸ்கள் நேற்று பிற்பகலுக்கு பிறகு, பெங்களூருக்கு இயங்கத்தொடங்கியது.

0 comments: