Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
திருப்பூர் : வங்கி கடன் பெற்றுத் தருவதாக, மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மோசடி செய்த பெண் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் ஸ்டேஷனை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு, கொங்கணகிரி, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், பெங்களூருவில் உள்ள 'நேத்ரா மைக்ரோ பைனான்ஸ்' மூலம், தொழில் துவங்க கடன் பெற்றுத்தருவதாக, லட்சுமி நகரை சேர்ந்த சாந்தி, 45, கூறியுள்ளார். சில குழுவினருக்கு கடன் பெற்றுக்கொடுத்துள்ளார்.புதிய குழுக்கள் துவங்கி, அக்குழு உறுப்பினர்களிடம் டிபாசிட் மற்றும் கமிஷன் பெற்ற சாந்தி, நீண்ட நாட்களாகியும் கடன் பெற்றுத் தரவில்லை. போஸ்ட் ஆபீசில் குழு உறுப்பினர்கள் பெயரில் துவங்கிய தொடர் வைப்பு நிதி பணத்தையும் மோசடி செய்துள்ளார்.
பல லட்சம் ரூபாய் மோசடி செய்த அவர் மீது, கடந்த மாதம் 14ம் தேதி, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நேற்று காலை மகளிர் குழுவினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட சாந்தியிடம் இருந்து தொகையை பெற்றுத்தர வேண்டும். வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி, வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த இன்ஸ்பெக்டர், உடனடியாக, போலீசாரை சாந்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் இல்லை என தெரியவந்தது.
மகளிர் குழுவினர் கூறுகையில், 'நாளை (இன்று) காலை 11.00 மணிக்கு மீண்டும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், போலீசாரை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம்' என்றனர்.

0 comments: