Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    
தாது மணல் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு மனித உரிமை தலைவர் வலியுறுத்தல்
தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல் மற்றும் கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய தலைவர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் சட்ட விரோதமாக கிரானைட் தொழில் மூலம் நடத்தப்பட்ட முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 90 குற்ற வழக்குகளில் 50–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, வெள்ளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல ஆறுகள் மணல் கொள்ளையர்களால் நாசமாக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 55 ஆயிரம் லாரிகளில் ஆற்று மணல் எடுக்கப்படுகிறது.
கேரளா, கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்க தடை உள்ளதால் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. எனவே தமிழகத்தில் இனி ஆற்று மணல், தாது மணல், கிரானைட் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் கீழ் சிறப்பு குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு திறம்பட செயல்பட உரிய கால அவகாசம், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன், அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: