Friday, October 17, 2014

On Friday, October 17, 2014 by farook press in ,    
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

தையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றம் வந்தார். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (17ஆம் தேதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு முன்னர் நடைபெற்றது.
வாதத்தின்போது சுப்பிரமணியன் சுவாமி, " நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.
ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், "ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.
அப்போது நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.

எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18 ஆம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. மீறினால் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18 ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" என்றனர்.
இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். வழக்கையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் உடல் நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள 2 மாத காலத்திற்கும் ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், சாதாரண நபர் போன்று வெளியில் செல்லக்கூடாது என்றும், டாக்டர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.மேலும் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாமல் ஜெயலலிதா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக ஜெயலலிதாவுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் பாலி நாரிமனும் இது தொடர்பான உத்தரவாதத்தை அளித்தார்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், ஜெயலலிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் ஜாமீன் கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது.ஜாமீன் உத்தரவாதத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வழங்க உள்ளனர். இந்த உத்தரவாதத்தை ஏற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆக முடியும். ஒருவேளை குன்ஹா இல்லையென்றாலும், சம்பந்தப்பட்ட நீதிமன்ற அலுவலகமே, தேவையான ஜாமீன் உத்தரவாத ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்கலாம். எனவே ஜெயலலிதா இன்று மாலை அல்லது நாளை விடுதலை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறதஇந்நிலையில் சிறையில் இருந்து வெளிவரும் ஜெயலலிதாவை விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சென்னை வரும் ஜெயலலிதா நேரடியாக தனது போயஸ்கார்டன் இல்லத்திற்கு செல்வாரா அல்லது உடல் நலக்குறைவுக்காக மருத்துவமனைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.உடல்நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் பெறப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

0 comments: