Thursday, October 16, 2014

On Thursday, October 16, 2014 by farook press in ,    
திருப்பூரில் பயணிகளிடம் அரசு விதிமுறைக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக நி்ர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருப்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் நகர, புறநகரப் பேருந்துகள் அனைத்தும் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் என அறிவித்து சாதாரண பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களுக்கு மாறாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் விதிமுறைக்குப் புறம்பான கட்டண உயர்வை கைவிட போக்குவரத்து நிர்வாகம் தயாராக இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரியதிலும் சாமானியப் பேருந்துகளுக்கு மாறாக விரைவுப் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கவில்லை என்ற விபரமும் தெரியவந்தது. 
எனவே எந்த வகையிலும் நியாயம் இல்லாத வகையில், திருப்பூரில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களிடம் பகற்கொள்ளை போல கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். அரசு விதிமுறைப்படி சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
புதன்கிழமை மாலை திருப்பூர் அவிநாசி சாலையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்ற உள்ளனர். கட்சி அணியினர், பேருந்து பயனாளிகள் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர்.
---------

0 comments: