Thursday, October 16, 2014

On Thursday, October 16, 2014 by farook press in ,    




தமிழகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியப் பணிகளை தொழிற்சங்கங்கள் மூலம் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க திருப்பூரில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டம் வலியுறுத்தி உள்ளது.
அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிறசங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் பி.முத்துசாமி (சிஐடியு) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்.சந்திரன், டி.குமார், பி.பாலன், வி.சண்முகம் (சிஐடியு), என்.சேகர், எஸ்.சங்கர், சி.தண்டபாணி (ஏஐடியுசி), காளியப்பன், முத்துசாமி, சண்முகசுந்தரம் (எச்எம்எஸ்), சீனிவாசன், நாரயணசாமி (எல்பிஎப்), செ.முத்துக்குமாரசாமி (எம்எல்எப்), செந்தில் (பிஎம்எஸ்), ராஜேந்திரன் (ஐஎன்டியுசி) ஆகியோர் பங்கேற்றனர்.
தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதற்காகவே தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையை மாநில அரசு செய்து வருகிறது. நலவாரிய பணிகளில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பை மறுக்கும் போக்கை கைவிட வேண்டும். நலவாரிய பணிக்காக தொழிலாளி ஏதேனும் ஒரு முறை தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு வந்தால் போதும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் அளித்த உறுதிமொழியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தொடர்ந்து தொழிற்சங்கங்களை நலவாரியப் பணிகளில் மறுக்கும் நலவாரிய அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர் பதிவு புதுப்பித்தல், பணப்பயன் ஆகியவற்றிற்காக தொழிலாளர்களை அலைக்கழிக்கக் கூடாது. அவர்களது விண்ணப்பங்களை தொழிற்சங்கங்களிடமே பெற வேண்டும். 
அமைப்புசாரா மற்றும் கட்டுமான நலவாரியத்தில் கடந்த ஏழெட்டு மாதங்களாக பணப்பயன் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உடனடியாக காலதாமதம் இல்லாமல் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர் விபத்து மரண இழப்பீட்டு நிதி ரூ.5 லட்சம் வழங்குவதைப் போல் அனைத்து அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு அட்டை வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளனர். உடனடியாக பதிவு அட்டை வழங்கிட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக நலவாரியத்திற்கு பொறுப்பான, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலரையும், மாவட்ட ஆட்சியரையும், தொழிலாளர் துறை இணை ஆணையரையும் நேரில் சந்தித்து முறையிடுவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிறகும் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபடியும் கூடிப் பேசி, தேவையான போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
-------------

0 comments: