Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
கிரானைட் உரிமையாளர்கள் 86 பேருக்கு நோட்டீசு: மதுரை கலெக்டர் நடவடிக்கைமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டியதில் ரூ.16 ஆயிரம் கோடி கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம் அரசுக்கு அளித்த அறிக்கை அடிப்படையில் மதுரை மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் 2011–ம் ஆண்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முறைகேடுகள் நடந்ததாக 86 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனை நடத்தி குவாரிகளில் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து மதிப்பீடு செய்தனர்.
கிரானைட் மோசடி குறித்து 90–க்கும் மேற்பட்ட வழக்குகள் மேலூர் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டில் அதிக வழக்குகளில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்களை வங்கி கடனுக்காக ஏலம் விடப்படும் நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் கிரானைட் முறைகேட்டில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.
கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட கிரானைட் கற்களை மதிப்பீடு செய்ததில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு கிரானைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 86 கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க, மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வருகிற 3–ந்தேதி முதல் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் குவாரி உரிமையாளர்களிடம் உடனடியாக அபராத தொகையை அறிவிக்க, கலெக்டர் முடிவு செய்துள்ளார். அந்த தொகையை அவர்கள் மீதான வழக்கு முடியும் தருவாயில் கனிம வளத்துறை வசூல் செய்யும்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரணைக்கு வர உள்ள நிலையில், குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மதுரை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: