Sunday, December 28, 2014

On Sunday, December 28, 2014 by farook press in ,    
திருப்பூரில் நடந்த தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்குக்கு தலைமை தாங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:–
பிரதமர் நரேந்திரமோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை திருப்பூருக்கு அறிமுகம் செய்ய வந்துள்ள மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு கருத்துக்களை கேட்க உள்ளார். திருப்பூர், கோவை தொழில் நகரங்கள் மேம்பாட்டிற்காக தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரச்சினைகளை திருப்பூர் நகரம் சந்தித்தது. சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு திருப்பூர் நல்ல சாதகமான தளமாக விளங்கி வருகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறன்மிகு தொழிலாளர்கள் போன்ற தேவைகள் நிறைவேற்றப்படும்போது உலக அரங்கில், போட்டி நாடுகளின் சவால்களை வென்று வர்த்தகத்தில் சாதனை புரிய முடியும். மத்திய அரசின் பங்களிப்போடு இந்த அறிவியல் பூர்வமான திட்டங்களை மேற்கொண்டால், மொத்த ஏற்றுமதியான ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவீத அளவு கூடுதலாக சேமிக்கப்படும். இதனால் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த துறையில் மாற்றம் முக்கியம். ஆடை தயாரிப்பில் திருப்பூர் முத்திரை, டிசைன் ஸ்டுடியோ தேவை. நிப்ட் டீயுடன் இணைந்து அரசு திட்டத்தை நிறைவேற்றினால் புதிய முத்திரையை திருப்பூர் நகரம் நிச்சயம் உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ஜவுளி குழு செயலாளர் நாயக் பேசியதாவது:–
இந்திய ஜவுளி தொழில் மூலம் கடந்த ஆண்டில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. உள்நாட்டு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இறக்குமதியில் லேசான வித்தியாசம் உள்ளன. இதில் 65 சதவீதம் உள்நாட்டு வர்த்தகமும், 35 சதவீதம் ஏற்றுமதியும் நடந்துள்ளன. பொருளாதார நிலையை மேம்படுத்த இந்திய அளவில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இந்திய ஏற்றுமதியில் 10 சதவீதம் பங்களிப்பை திருப்பூர் பின்னலாடை தொழில் வழங்குகிறது. சர்வதேச அளவில் பிழைகள் இல்லாமல் உற்பத்தி பணிகளை மேற்கொள்ளும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
தொழிலாளர் திறன் மேலாண்மை, மெஷின் தொழில்நுட்பம், திறமையான நிர்வாகம் இந்த மூன்றும் சிறப்பான முறையில் அமைந்தால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் சிறப்பாக இருக்கும். சர்வதேச போட்டியில் குறித்த நேரத்தில் டெலிவரி, சுங்கஇலாகா பிரிவு சார்ந்த பணிகளை சீராக வைத்துக்கொள்வது, தரம் ஆகிய விஷயங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு உதவ அரசு எல்லா நிலையிலும் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில், தண்ணீர் இல்லாமல் சாயமேற்றும் தொழில் நுட்பம், செயற்கை இழை ஆடைகளை உருவாக்கும் திட்டங்கள், நிறமூட்டப்பட்ட பஞ்சு உற்பத்தி வழிமுறைகள், பின்னலாடை உற்பத்தியின்போது ஏற்படும் குறைபாடுகளை களைவது, அதன்மூலம் ஏற்படும் சார்பு பிரச்சினைகளை தீர்ப்பது, மனித வளத்தை சரியாக பயன்படுத்துவது, செலவுகளை குறைக்கும் வழிமுறைகள், நிர்வாக மேலாண்மை நுட்பங்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப கருத்துக்களை ஆலோசகர்கள் அழகன் கருப்பண்ணன், கேசவன், அனுக்கிரஹா சுபாஷ்குமார், ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர் பேசினர்.
திருப்பூருக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் குறித்த திட்ட வரைவை இந்திய தொழில் கூட்டமைப்பு துறையினர் மத்திய இணை மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க, மாநில துணை தலைவர் வானதிஸ்ரீனிவாசன், கோவை முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, ரைசிங் உரிமையாளர் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் தலைவர் வைகிங் ஈஸ்வரன், துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், கம்ப்யூட்டர் எம்பிராய்டரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கல்யாண சுந்தரம், நிப்ட் டீ கல்லூரி தலைவர் முருகானந்தம், சிம்கா தலைவர் விவேகானந்தன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட பிரிவின் துணை தலைவர் எம்.வேலுசாமி நன்றி கூறினார்.

0 comments: