Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் சக்திவேல்(வயது 45). இவர் ஏலச்சீட்டு மற்றும் மாதச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி வந்தனர். பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் சக்திவேல் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன் சக்திவேல் திடீரென்று மாயமானார். இதனால் அவரிடம் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் சக்திவேலை தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் வைத்து சக்திவேலை நேற்று திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் 50–க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சக்திவேல் மீது மேலும் பலர் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.
திருப்பூரை அடுத்த லட்சுமி நகரில் வசித்து வருபவர் கோபால் (வயது40). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக வேலை செய்து வருகிறார். இத்துடன் அப்பகுதி மக்களிடம் வாரம் ரூ.100, ரூ.200, ரூ.500 என்ற வகையில் பணம் வசூலித்து தீபாவளிக்கு பலகாரத்துடன் கூடுதலாக பணம் கொடுக்கும் வகையில் பலகார சீட்டு நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோபாலும் அவரது காம்பவுண்டில் வசித்து வரும் ஜெயகுமார், லட்சுமி, தவமணி, காயத்திரி, சித்ரா உள்பட பலர் பெரியசாமியிடம் பலகார சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.
ஆனால் பணம் கட்டி 3 மாதம் முடிந்த நிலையில் சீட்டு பணம் திருப்பி தரவில்லை. இது குறித்து பல தடவை கேட்டும் பெரியசாமி தர மறுத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பலரிடம் ஆயிரக்கணக்கில் மோசடி செய்து பணம் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோபால் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார்.

0 comments: