Wednesday, December 17, 2014

On Wednesday, December 17, 2014 by Unknown in ,    
சகாயத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்?: மதுரை–ஈரோட்டில் தீவிர விசாரணைஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் முதல்கட்டமாக மனுக்களை பெற்று வரும் சகாயம் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த குமார் பெயரில் அந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
அதில் உடனடியாக விசாரணையை முடித்துவிட்டு மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் உயிருடன் திரும்ப முடியாது. இதையும் மீறி தொந்தரவு கொடுத்தால் கிரானைட் குவாரியில் போட்டு சமாதியாக்கி விடுவோம்.
என் மனைவி பிரேமா ராணி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். அவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணி இட மாறுதலும் வாங்கித் தர வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து சகாயம், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூருக்கு புகார் அனுப்பினார். மதுரை நகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், இந்த கொலைமிரட்டல் கடிதம் குறித்து சகாயத்திடம் நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கிரானைட் அதிபர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. உண்மையில் மிரட்டல் கடிதம் எழுதுபவர்கள் தங்கள் பெயரை அந்த கடிதத்தில் குறிப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த கடிதத்தில் குமார், அவரது மனைவி பிரேமாராணி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து மதுரை மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் விசாரணை நடத்தப்பட்டது. கொடுமுடியில் உள்ள குமார், அவரது மனைவி பிரேமா ராணி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை மிரட்டல் கடிதத்திற்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது.
கடந்த தீபாவளி சமயத்தில் சேலம் போலீசாருக்கு குமார் பெயரில் அனுப்பப்பட்ட கடிதத்தில் குண்டு வைக்க போவதாக எழுதப்பட்டு இருந்தது. எனவே குமார் குடும்பத்தை பிடிக்காத சிலர் அவர்களை ஏதாவது பிரச்சினையில் சிக்க வைக்க வேண்டும் என்று சதி செயலில் இந்த கடிதங்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது சகாயத்திற்கும் வந்துள்ள கடிதம் இந்த பின்னணியில் எழுதப்பட்டதாகவே போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கடிதத்தை அனுப்பியது யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலைமிரட்டல் வந்துள்ளதையடுத்து சகாயத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும்போது சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது

0 comments: