Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
வெள்ளகோவிலில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்தில் வாரத்தில் ஒரு நாள் (புதன்கிழமை) மட்டும் தேங்காய் பருப்பு வியாபாரம் நடைபெறும். வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய் பருப்பை விற்பனை கூட அதிகாரிகள் டெண்டர் மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு பணத்தை கொடுப்பார்கள்.
விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய் பருப்பை வாகனங்களில் இருந்து இறக்கவும், ஏற்றவும் தேங்காய் பருப்பு சுமைதூக்குபவர்கள், இறக்கு கூலியாக 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.6–ம், எடைக்கூலியாக ரூ.9.50 காசும், ஏற்றுவதற்கு கூலியாக ரூ.6.50 காசும் வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்தனர்.
இந்த கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என தேங்காய் பருப்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு வியாபாரிகள் கூலி உயர்வு தர முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறினர். இதனால் கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். வேலை நிறுத்தத்தால் தேங்காய் பருப்பு வியாபாரம் நடைபெறவில்லை. இது தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கூலி உயர்வு பிரச்சினையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ., ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் முருகானந்தன், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேங்காய் பருப்பு சுமைதூக்குவோர் தொழிற்சங்க தலைவர் வீரக்குமார்(அ.தி.மு.க), தி.மு.க. தொழிற்சங்க தலைவர் தெண்டபாணி, தேங்காய் பருப்பு வியாபாரிகள் சங்க தலைவர் சாமிமுத்து, அ.தி.மு.க. நகர செயலாளர் டீலக்ஸ் மணி, நிலவள வங்கி துணைத்தலைவர் ராஜலிங்கம், அ.தி.மு.க. பிரதிநிதி முருகேசன், சேகர், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இறக்கு கூலியாக 100 கிலோ மூட்டைக்கு ரூ.8ம், எடைக்கூலியாக ரூ.10–ம், ஏற்றுக்கூலியாக ரூ.10–ம் கொடுப்பது என முடிவானது. இந்த கூலி உயர்வு வருகிற 1–ந்தேதி முதல் 2016 வரை அமலில் இருக்கும்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் 1–ந் தேதியில் இருந்து வேலைக்கு திரும்புகிறார்கள். எனவே விவசாயிகள் தங்களது விளை பொருளான தேங்காய் பருப்பை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வரலாம் என்று என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

0 comments: