Saturday, December 06, 2014

On Saturday, December 06, 2014 by Unknown in ,    
பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க ஒன்றுகூடி போராட வேண்டும்: வைகோ பேச்சு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உசிலம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வல்லரசு பார்வர்ட் பிளாக் கட்சி இளவரசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. புறநகர் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் முல்லைப்பெரியாறு அணை போராட்டக்குழுவை சேர்ந்த கம்பம் அப்பாஸ், உசிலை ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:–
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 152 அடியாக உயர்த்தினால் தான் நமக்கு முழு வெற்றியாகும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது.
இது உண்மையல்ல. நீர்பிடிப்பு பகுதியில் பெரும் பணக்கார முதலாளிகள் கட்டப்பப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை காக்கவேண்டும் என்பதற்காக பொதுமக்களை கேடயமாக வைத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு எதிராக கேரள அரசு செயல்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சரியான வழியில் சென்று பெற்றுத்தந்த சகோதரி ஜெயலலிதா பாராட்டுக்குரியவர். ஆனால் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில் கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் செயல்பட்டவர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறேன்.
தற்போது உள்ள சூழ்நிலையில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
ஆனால் தற்போது அமராவதி அணைக்கு ஆபத்து வந்து விட்டது. அமராவதிக்கு தண்ணீர் கொண்டு வரும் பாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதை தடுக்க நாம் ஒன்றுகூடி போராட வேண்டும் இதற்கான போராட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன்.
காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கர்நாடக அரசு நான்கு அணைகளை கட்டி நமக்கு போதிய தண்ணீர் தராமல் வஞ்சித்து வருகிறது. இதற்கிடையில் தற்போது புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு தீர்மானித்து உள்ளது.
இதற்கு மத்திய அரசும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. அது உண்மையானால் நமது தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் 13 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை இழந்து 12 மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விடும்.
தமிழ்நாட்டில் உள்ள பெண்களும், இளைஞர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மதுவை ஒழிக்க வேண்டும். இந்த மதுவை எதிர்த்து பெரும் யுத்தம் நடத்த வேண்டி உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் முழு உண்மையையும் மத்திய அரசு வெளியிடவேண்டும் அப்படி வெளியிடவில்லை என்றால் மத்திய அரசை எதிர்த்து அறப்போட்டம் நடத்த உள்ளேன். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments: