Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி மலைக்கோயில் உள்ளது. இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயில், மாவட்டத்தின் முதன்மைக் கோவிலாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இக்கோயிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து சுமார் 800 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. இதன் வழியே தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையில் ஏறி, சாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் படி வழியே ஏறிச் செல்வர். மலைக் கோயிலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தார்ச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது பாதையாக, யானைத்தடம் என அழைக்கப்படும் பாதை உள்ளது. இதிலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த யானைத்தடப் பாதை மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
யானைத்தடம் தான் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு முதன்மை வழியாக இருந்தது. இதன் வழியாக அடிவாரத்தில் இருந்து பூஜைப் பொருள்களை யானையின் மீது வைத்து, எடுத்துச் சென்றனர். காலப் போக்கில் படிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் தார்ச்சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த யானைத்தடத்தின் வழியே இன்னமும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்களால் 800 படிகளை ஏறுவது என்பது இயலாத காரியம். தார் சாலையில் வசதியுள்ளவர்கள் வாகனத்தில் செல்கின்றனர். சாதாரண நாள்களில் கூட்டம் சேர்ந்தால் தான் பேருந்தும் இயக்கப்படும். எனவே பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி கோயிலுக்கு செல்வதற்கு இந்த யானைத்தடமும்
அவசியமாகும். எனவே, கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ள இந்த யானைத் தடப் பாதையை பக்தர்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிட வேண்டும் என்றனர்.
இது குறித்து கோயில் தரப்பில் கேட்டபோது, இந்தப் பாதையில் உள்ள மரங்கள் முறிந்து கிடப்பதால், பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்புபோல, இந்த வழித்தடத்திலும் பக்தர்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

0 comments: