Wednesday, February 04, 2015

On Wednesday, February 04, 2015 by Unknown in ,    
நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்க வேளாண், வருவாய்த் துறை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாகவும், இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாகவும் அண்மையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:
 மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் அணைகளில் போதிய நீர்இருப்பு இருந்த காரணத்தால் ஏறத்தாழ 44 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகமானதால் வெளிச்சந்தையில் போதிய விலை கிடைக்கவில்லை.
 இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் 69 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இதுவரை 27 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சன்னரகம் கிலோ ரூ.14.70-க்கும், பொது ரகம் கிலோ ரூ.14.10-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் உரிய விலை கிடைக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை, வருவாய்த் துறை அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
 நெல்கொள்முதல் தொடர்பாக குறைகள் ஏதும் இருந்தால் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை 0452-2534278, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரை 0452-2530911 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 கூட்டுறவுத் துறை சார்பில் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, மேலூர் ஆகிய இடங்களில் உள்ள வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், மன்னாடிமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஆர்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

0 comments: