Tuesday, March 31, 2015

On Tuesday, March 31, 2015 by Unknown in ,    

புகார்களில் முகாந்திரம் இருந்தும் வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதே நடவடிக்கை குறித்துதான் மதுரைக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த டி ஜி பி அசோக் குமார் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்துள்ளார் .மேலும் நீதிமன்ற உத்தரவில் காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டிய தேவையில்லை. புகார் உண்மை இல்லை என்று தெரியவந்தால் புகார் முடிக்கப்பட்டதற்கான காரணத்தை புகார்தாரருக்கு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
ஊழல், வணிக குற்றங்கள், குடும்பத்தகராறு, மருத்துவம் மீதான புகார்கள் மீது 7 நாட்களுக்குள் முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும். அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பேட்டில் குறிப்பிட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை போலீசாருக்கு தமிழக காவல்துறை இயக்குநர் தெரிவிக்க வேண்டும். அதனை போலீசார் சரியாக நடைமுறைப்படுத்துகிறார்களா என்று குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் போலீசார் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்
ஆனால் இது எந்த அளவில் நடைமுறைக்கு சாத்தியம் என்பது மில்லியன் டாலர் கேள்வி
ஏனென்றால் இன்று சாமான்ய மக்களுக்கு உடனடி நியாயம் கிடைக்கிற இடமாக தமிழகத்தில் காவல் நிலையங்கள் இல்லை என்பதே வெட்ட வெளிச்சமான உண்மை
ஒருவர் சாதரணமாக திருட்டு புகார் கொடுக்க சென்றாலே வெள்ளை பேப்பர் ,டீ ,செலவுக்கு காசு என அடுக்கி அவர்களிடம் இருந்து முழுதாக உரித்து விடுவதால் புகார் கொடுக்க வருகிறவர்களின் நிலை பரிதாபத்திற்குரிய நிலை ஆகி விடுகிறது .
வண்டி தொலைந்து போன புகார்களில் ஆளாளுக்கு புகார் கொடுத்தவர் பந்தாடப்பட்டு கடைசியில் வண்டியை மறக்க வேண்டிய சூழலே ஏற்படுகிறது" காவல் துறை உங்கள் நண்பன் உண்மைதான்
நண்பனால் மட்டும்தான் உரிமையாக காசு கேட்க முடியும் … "என்ற வரிகள் சொல்வது போல் சில காவல்துறை அதிகாரிகளை தவிர பெரும்பாலும் காவல்நிலையங்களில் பணியாற்றுவோர்கள் எப்படி காசு பார்க்கலாம் என்ற நிலையிலே பணி செய்கின்றனர் .
பெண்கள் தனியாக புகார் அளிக்க வந்தால் அவர்களுக்கு தரப்படும் வேறு மாதிரியான கவனிப்புகள் பெண்களை காவல்துறை அதிகாரிகள் என்றாலே மிரண்டு ஓட செய்து விடுகிறது
ஆர்ப்பாட்டம் ,பொதுக் கூட்டங்களில் ஆங்காங்கு கரை வேட்டிகளிடம் காசு பார்த்திடும் இவர்கள் புகார் கொடுக்க வரும் அப்பாவி பொது மக்களையும் கடைசி மூச்சு வரை காசு வாங்காமல் விடுவதில்லை
மக்கள் சேவகர்கள் என்பதை மறந்து போய் அதிகார தொனியிலேயே பொதுமக்களை அணுகுகின்றனர் .சில நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் திருந்தாத புல்லுருவிகளால் கெட்ட பெயரே மிஞ்சுகிறது
மக்கள் கொடுக்கும் புகாரினை காவல் துறையினர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. காவல் துறையினர்தங்கள் முன் வரும் புகார்களில் முகாந்திரங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு CSR அல்லது திமிஸி பதிவு செய்வது அவசியம். அவ்வாறாக பதிவு செய்ய மறுப்பது சட்டத்தின் முன் ஏற்புடைய செயல் அல்ல. பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் தலைமை காவல் அலுவலருக்கு பதிவு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ புகாரை அனுப்பி பதிவு செய்யலாம். அப்படியும் பதிவு செய்யப்படவில்லை எனில் நீதிமன்ற ஆணை பெற்று பதிவு செய்ய சட்டத்தில் வழிஉண்டு. காவல் துறையினர் புகாரை பதிவு செய்வதுடன் முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை புகார் கொடுப்பவருக்கு இலவசமாக அளிப்பது சட்டப்படி அவசியம்.
சட்டங்களும், காவலை துறை விசாரிப்புகளும் எளிமையானால் மக்கள் தைரியமாக புகார் கொடுப்பார்கள் இவர்கள் மாற வாய்ப்பு இருப்பதாக எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்பதே கசப்பான உண்மை !

0 comments: