Friday, August 14, 2015

On Friday, August 14, 2015 by Unknown in ,    
சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை தூர்வாரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வறட்சியான பகுதியாக இருந்த சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள வெம்பக்கோட்டையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் 7 மீட்டர் உயரம் வரை தண்ணீரை தேக்கலாம். அதிகமாக தண்ணீர் வந்தால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு, இருக்கன்குடி அணைக்கு செல்லும்.
அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அந்தத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, குழாய் வழியாக சிவகாசி நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த அணைக்கு அரசு சிமெண்ட் ஆலை உள்ள ஆலங்குளம், சேத்தூர்-சிவகிரிப் பகுதியிலும், திருவேங்கடம் பகுதியிலும் மழைபெய்தாலும் தண்ணீர் வரும்.
காலப் போக்கில் சிவகாசியில் மக்கள் தொகை அதிகமானதால், சிவகாசிக்கு மானூர் கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் வறட்சிகாலத்தில் நகராட்சி கிணறு அமைத்தும், உறைகிணறு அமைத்தும் தண்ணீர் எடுத்து வருகிறது.
தற்போதும், தினசரி 10 முதல் 15 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்படுகிறது. எனினும், இந்த அணை கட்டப்பட்ட நாள்முதல் இதுவரை தூர்வாரப்படவில்லை. அவ்வப்போது மதகுமட்டும் சீரமைக்கப்படும்.
இந்த அணையை தூர்வார வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, தண்ணீர் வரத்துப்பகுதியிலும், அணைப்பகுதியிலும் சீமைகருவேல் மரங்கள் வளர்ந்துள்ளது. மேலும் அணைப் பகுதியில் சுமார் 2 மீட்டர் அழம் வரை வண்டல் மண் படிந்துள்ளது.
மழைபெய்து தண்ணீர் வந்தால், இரண்டு மீட்டர் வரை சகதியும் சேறுமாக காட்சியளிக்கிறது. இதனால் தண்ணீரை முழு கொள்ளளவு நிரப்ப இயலவில்லை.
மழைக் காலங்களில் அணை நிரம்பிவிட்டது என தண்ணீரை திறந்துவிடுகிறார்கள். ஆனால், இரண்டு மீட்டர் ஆழம் வரை சகதியாக இருப்பதால் தண்ணீர் விரைவில் காலியாகிவிடுகிறது.
அணைப் பகுதியிலும், நீர்வரத்துப் பகுதியிலும் உள்ள முள்செடிகளை அகற்றி, மணல் மற்றும் களி மண்ணை அகற்றி தூர்வார வேண்டும் என சிவகாசி நகர பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது குறித்து சிவகாசி நகர் மன்றத்தலைவர் வெ.க.கதிரவனிடம் கேட்டபோது, பொதுப்பணித் துறையினரிடம் அணையை தூர்வாரவேண்டும். அணையின் முன்பு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என நகராட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்

0 comments: