Saturday, August 22, 2015

On Saturday, August 22, 2015 by Unknown in ,    
பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜன் முன்னிலை வகித்தார். இதில், அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற விவாதம்:
ராமமூர்த்தி(ஸ்ரீவில்லிபுத்தூர்): நீர்வள நிலவளத்திட்டம் சார்பில் கண்மாய் நீர்ப்பாசன சங்கங்களுக்கு விவசாயிகள் பயனடையும் வகையில் அறுவடை இயந்திரம், பவர் டிரில்லர், களை எடுக்கும் கருவிகள் வழங்கப்படவில்லை. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டுவிலங்குகள் தண்ணீர் அருந்த வருவதோடு, விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. அதனால் மலை அடிவாரப்பகுதியில் விலங்குகள் பயனடையும் வகையில் பண்ணைக்குட்டைகள் அமைக்க வேண்டும்.
ராமசுப்பிரமணியராஜா(மா விவசாயிகள் சங்கம்): தோட்டக்கலை விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு வர அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்.
இருளப்பன்(பிளவக்கல் அணை பிரிவு நீர்ப்பாசன சங்கம்): பிளவக்கல்-கோவிலாறு அணைகளில் இருந்து வெளியேறி கண்மாய்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அகலமாக இருந்த ஓடை, கால்வாய் அளவுக்கு குறுகியுள்ளது. இதனால் அணை திறக்கும் காலங்களில் கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்வதில் சிரமம் உள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அம்மையப்பன்(வட்டார விவசாயிகள் சங்கம்): ராஜபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். அதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில், நீர்வள நிலவள திட்டம் முடிந்தது. அதனால் வேறு திட்டங்களில் நீர்ப்பாசன சங்க விவசாயிகள் பயனடையும் கருவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதேபோல், வனத்துறை உதவியுடன் வனவிலங்குகளுக்கான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும். தேசிய தோட்டக்கலை இயக்கம் என்பது மத்திய அரசு குறிப்பிடும் மாவட்டங்களில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது.
  இனி வருங்காலங்களில் கொண்டு வருவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பரிந்துரைக்கப்படும்.  பிளவக்கல்-கோவிலாறு அணைப்பகுதியிலிருந்து வெளியேறும் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சேத்தூர் பகுதியில் கால்நடை மருத்துவர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: