Friday, August 28, 2015

On Friday, August 28, 2015 by Unknown in ,    
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 இதில் சிறப்பிடம் பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என   அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் எந்நேரமும் பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்துவதால் மன இறுக்கத்திற்கு ஆளாகும் நிலையுள்ளது. எனவே பள்ளிகளில் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9,10,11,12 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கலை விழா போட்டி நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 இசை, நாடகம், நடனம் மற்றும் காண் கலைகளான பரிமான கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், இரு மற்றும் முப்பரிமான ஓவியங்கள், பொம்மைகள், கைவினை பொருள்கள் மற்றும் சுடுமண் பொருள்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கலைவிழா போட்டிகள் 3 கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. கல்வி மாவட்ட அளவில் செப்.30 ஆம் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் அக்.15-ஆம் தேதிக்குள்ளும், மாநில அளவில் நவ.15-ஆம் தேதிக்குள்ளும் நடத்தப்பட இருக்கிறது.
 அதற்கு முன்னதாக திருச்சியில் தெப்பக்குளம் பிஷப் ஹூபர் மேல்நிலைப்பள்ளி பயிற்சி வளாகத்தில் இப்போட்டிகள் நடத்துவது தொடர்பாக வருகிற செப்.9ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
    இதில், கலை ஆர்வம் உள்ள நேர்முக உதவியாளர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் ஒருங்கிணைப்பாளர், இசை ஆசிரியர், ஓவியர் ஆசிரியர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
 இதை இடைநிலை கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 கலை பற்றிய முழு தகவல் சேகரிப்புக்கு-30, இசை-10, மேடை அலங்காரம்-10, உடைகள் ஒப்பனைகள்-10, சிறப்பாக நடிக்கும் மாற்றுதிறனாளி-15, உணர்ச்சி மிக்க நடிப்புக்கு-25 என மதிப்பெண்கள் அளிக்கப்பட இருக்கிறது.  
 இதில், கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர், மாவட்ட அளவிலும், அதில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலும் பங்கேற்பர்.  அதையடுத்து மாநில அளவில் வெற்றி பெறுவோர் தேசிய அளவில் புதுதில்லியில் பாலபவர் அரங்கத்தில் டிச.8ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதில், சிறப்பிடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு டிச.11-ஆம் தேதி அதே அரங்கத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
  அதில், முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2-ஆம் பரிசாக ரூ.3 லட்சமும், 3-ஆம் பரிசாக ரூ.2 லட்சமும் அளிக்கப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் விருது பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை விழா கன்னாட்பிளேஸ் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
  கிராமங்களில் அழிந்து வரும் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்திலேயே மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இப்போட்டிகளை நடத்துகிறது.

0 comments: